ரணில் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்க மறுக்கும் சஜித் அணியினர்

ஐக்கிய தேசியக் கட்சியின்தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சரவையில் ஐக்கிய மக்கள் சக்தி அமைச்சு பொறுப்புக்களை ஏற்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விக்ரமசிங்கவின் அமைச்சரவையில் இணைவதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு எதனையும் தமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கவில்லை என கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

புதிய பிரதமராக விக்கிரமசிங்க பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவையை விக்ரமசிங்க உருவாக்குவார் என்று ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே நான்கு நிபந்தனைகளின் அடிப்படையில் புதிய அமைச்சரவையை அமைப்பதற்கு உடன்படுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்திருந்தது.

குறிப்பிட்ட கால எல்லைக்குள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும்,

புதிய அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு அவர் இணங்க வேண்டும்.

நாட்டின் நிலைமை ஸ்திரமானவுடன் மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்பதே நிபந்தனைகளாகும்.

எனினும் சஜித் தரப்பின் அணுகுமுறையை எதிர்த்து அந்த கட்சியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ ஏற்கனவே விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.