பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கவோ அல்லது அமைச்சுப் பதவிகளை ஏற்கவோ எவ்வித தீர்மானங்களும் இல்லை என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீPலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன இந்தத் தீர்மானத்தை அறிவித்தார்.
ஏற்கனவே தமது கட்சி, பிரதமர் பதவிக்காக மூன்று பெயர்களை முன்மொழிந்திருந்தபோதும் அதனை ஜனாதிபதி கருத்திற்கொள்ளவில்லை என்று மைத்ரிபால குற்றம் சுமத்தியிருந்தார்.
இதற்கிடையில் 10 கட்சிகளின் கூட்டணி, அரசாங்கத்தில் இணையாது சுயாதீனமாகவே செயற்படும். எனினும் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில அறிவித்துள்ளார்.
இதற்கிடையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த முடியும் என தாங்கள் நம்பவில்லை என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இந்த பொருளாதார நெருக்கடிக்கு விக்கிரமசிங்கவே பொறுப்பேற்க வேண்டியவர் என்று அவர் கூறியுள்ளார்.
இதேவேளை ரணிலின் அரசாங்கத்தில் எவ்வித பதவிகளையும் வகிக்கப்போவதில்லை என்று சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும் ஏற்கனவே அறிவித்துள்ளது.