கழுத்தின் கருமைக்கு காரணங்கள் என்ன தெரியுமா?

சிலருக்கு கழுத்து பகுதியில் கருமையான திட்டுக்கள் காணப்படும். அல்லது நிறமிகளால் பாதிப்பு நேரும். கழுத்து கருமையாக காட்சியளிப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.

சருமம் மிகவும் மென்மையானது. பருவ கால நிலை, உணவு முறை, சரும பராமரிப்பு வழக்கத்தில் மாற்றம் ஏற்படும்போதெல்லாம் சருமத்திலும் அதன் தாக்கம் வெளிப்படும். கழுத்தை சுற்றியுள்ள தோல் கருமையாக இருந்தால் உடலிலும் மாற்றங்கள் ஏற்படும். சிலருக்கு கழுத்து பகுதியில் கருமையான திட்டுக்கள் காணப்படும். அல்லது நிறமிகளால் பாதிப்பு நேரும். கழுத்து கருமையாக காட்சியளிப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.

* கழுத்தைச் சுற்றியுள்ள கருமையான சருமம் ‘அகாந்தோசிஸ் நிக்ரிகன்ஸ்’ எனப்படும். இது சருமத்தை கருமையாக்கும் தன்மை கொண்டது. ‘வெல்வெட்டி ஹைப்பர் பிக்மென்டேஷன்’ என்றும் வகைப்படுத்தப்படும். இதற்கு மரபணுக்கள் காரணமாக இருக்கலாம். குழந்தைக்கு பெற்றோர் மூலம் பாதிப்பை உண்டாக்கலாம்.

* உடல் பருமன் மற்றும் நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படுவதும் கழுத்து, அக்குள் பகுதி கருமையாவதற்கு பொதுவான காரணமாகும்.

* ரத்தத்தில் இன்சுலின் அதிகமாக இருப்பதும் கழுத்து கருமையாக மாறுவதற்கு காரணமாக அமையலாம். இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவை பரிசோதித்து, நீரிழிவு நிபுணரிடம் ஆலோசனை பெறுவது அவசியமானது.

* ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியால் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (பி.சி.ஓ.எஸ்.) எனப்படும் நோய் பாதிப்புக்குள்ளாகும் பெண்களின் ரத்தத்தில் இன்சுலின் அதிக அளவில் இருக்கும். அதன் காரணமாக கழுத்தின் பின்புறம், கைகள் மற்றும் இடுப்பு பகுதியில் கருமை தோன்றும்.

* கழுத்தின் பின்புறத்தில் உள்ள தோலில் கருமையான திட்டுகள் தென்படுவது நீரிழிவு நோய்க்கான அறிகுறியாகும். அதனை அலட்சியப்படுத்தக்கூடாது.

* கழுத்து உள்பட உடல் பகுதியில் கருமையான திட்டுகளை ஏற்படுத்தும் ‘அகாந்தோசிஸ் நிக்ரிக்கன்ஸ்’ நிலை, தைராய்டு அல்லது உடல் பருமனுடன் தொடர்புடையது. இவை சருமத்தை கருமையாக்கிவிடும்.

* வாசனை திரவியங்கள், ஹேர் டை போன்ற சில பொருட்கள் ஒவ்வாமை பிரச்சினையை ஏற்படுத்தலாம். அதனால் எந்தவொரு அழகு சாதன பொருளை பயன்படுத்துவதற்கு முன்பும் பரிசோதித்து பார்க்க வேண்டும். குறைந்தபட்சம் 24 மணி நேரம் வரை எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்றால் அதனை தொடர்ந்து பயன்படுத்தலாம்.

* கழுத்தில் கருமை படர்வதை தடுப்பதற்கு முதலில் செய்ய வேண்டியது உடல் எடையை குறைப்பதுதான். உடல் எடை அதிகரிக்கும்போது இயல்பாகவே கருமை தென்படத் தொடங்கிவிடும்.

* கழுத்தை சுத்தமாக வைத்திருங்கள். லாக்டிக் அமிலம் சார்ந்த கிரீம்கள், லோஷன்களை பயன்படுத்துங்கள்.

* வாசனை திரவியங்களை தோலில் தெளிப்பதை தவிருங்கள். சன்ஸ்கிரீன் பயன்படுத்த மறந்துவிடாதீர்கள்.