மதுப்பழக்கத்தை நிறுத்திய பின்னர் உடலில் நிகழும் மாற்றங்கள்

அதிகமாக மது குடிப்பவர்கள் மற்றும் மதுப் பழக்கத்தை தொடர்ந்து கொண்டிருப்பவர்களுக்கு சிரோசிஸ் எனப்படும் கல்லீரல் சுருக்கம் ஏற்படும்.

ஒரு மாதம் மது அருந்தாமல் இருந்தால் உடல் உறுப்புகள் பல்வேறு நோய் பாதிப்புகளில் இருந்து மீள தொடங்கிவிடும். குறிப்பாக கல்லீரலின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். அதிகமாக மது குடிப்பவர்கள் மற்றும் மதுப் பழக்கத்தை தொடர்ந்து கொண்டிருப்பவர்களுக்கு சிரோசிஸ் எனப்படும் கல்லீரல் சுருக்கம் ஏற்படும். அதனால் கல்லீரலில் கொழுப்பின் செயல்பாடுகளில் மாற்றங்கள் உருவாகும். மதுப்பழக்கத்தை நிறுத்தும்போது நேர்மறையான மாற்றங்கள் உருவாக தொடங்கும். அதனால் கல்லீரல் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கிவிடும். மதுவில் ஆல்ஹகால் அளவு அதிகரிக்கும்போது இதய நோய் ஏற்படும் அபாயமும் அதிகரிக்கும். ஆல்ஹகால் அதிகரிக்கும்போது டீஹைட்ரஜனேஸ்கள் எனப்படும் நொதி உருவாகும். அது கல்லீரலில் வளர்சிதை மாற்றத்தை ஏற்படுத்தும்.

மது அருந்துவதை நிறுத்தும்போது நல்ல கொழுப்பு உருவாகும். மாரடைப்பு ஏற்படும் அபாயமும் குறையும். இதயத்தின் ஆரோக்கியமும் மேம்படும். மதுப்பழக்கத்தை தொடர்பவர்களுக்கு புற்றுநோய் பாதிப்பு உருவாகக்கூடும் என்று பல்வேறு ஆராய்ச்சிகள் எச்சரிக்கின்றன. கல்லீரல் புற்றுநோய், மார்பகம், பெருங்குடல், உணவுக்குழாய், தலை மற்றும் கழுத்து பகுதிகளில் ஏற்படும் புற்றுநோய்களுக்கும், மதுவில் கலந்திருக்கும் ஆல்ஹகாலுக்கும் தொடர்பு இருப்பதை பல ஆய்வுகளும் உறுதிபடுத்தியுள்ளன.

மது அருந்துவதை நிறுத்துவது உடல் எடையை குறைப்பதற்கும் வழிவகுக்கும். அதில் இருக்கும் ஆல்ஹகால் கலோரிகளை அதிகரிக்க செய்து சர்க்கரை அளவையும் அதிகப்படுத்தும். தொடர்ந்து மது அருந்துவதை தவிர்க்கும்போது எடை குறைய தொடங்கும். மதுவில் இருக்கும் ஆல்ஹகால் மூளை வளர்ச்சியிலும் பாதிப்பை ஏற்படுத்தும். நினைவாற்றல் திறனையும் குறைக்கும். மது அருந்துவதை நிறுத்தும்போது மூளையின் ஆற்றல் அதிகரிக்க தொடங்கும்.

கல்லீரல் பாதிப்பு, புற்றுநோய், இரத்த குழாய்கள் பாதிப்பு, இதய தசைகளில் பாதிப்பு, தாம்பத்திய வாழ்க்கையில் பிரச்சினை, ஊட்டச்சத்துக் குறைபாடு, வயிற்று கோளாறு உள்பட பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆல்ஹகால்தான் காரணமாக இருக்கிறது. மதுப்பழக்கத்தை கைவிடும்போது உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் மேம்படும். ஆல்ஹகால் அதிகமாக உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும். உடல் ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தையும் ஏற்படுத்தக்கூடும் என்பது சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஆல்ஹகால் அதிகமாக உடலில் சேரும்போது நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க உதவும் இரத்த வெள்ளை அணுக்கள் குறைவதும் தெரியவந்துள்ளது.