அரசியல் கட்சி கொள்கைகளுக்கு தற்போதைய நிலையில் முக்கியத்தும் வழங்காமல் நாடு என்ற ரீதியில் எதிர் கொண்டுள்ள சவால்களை வெற்றிக்கொள்ள சகல தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாரளுமன்ற உறுப்பினர்களிடம் வலியுறுத்தியுள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சுயாதீனத்தன்மையை பாதுகாத்துக் கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க தயார். சமூக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது அவசியமாகும் என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
காலி முகத்திடல் போராட்டகாரர்கள் மீது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் கடந்த திங்கட்கிழமை (09) ஆம் திகதி மேற்கொண்ட தாக்குதலை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகியதை தொடர்ந்து,அமைச்சரவை முழுமையாக வரிதாகியது.
இவ்வாறான பின்னணியில் ஜனாதிபதிக்கும்,பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று காலை கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.
கடந்த திங்கட்கிழமை அலரிமாளிகையில் இடம்பெற்ற கூட்டத்தொடர்ந்து காலி முகத்திடலில் அமைதி வழி போராட்டகாரர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை அதனை தொடர்ந்து நாட்டில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களினால் நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதியற்ற நிலைமை குறித்து ஜனாதிபதி கூட்டத்தின் ஆரம்பத்தில் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
அரசாங்கத்தின் கொள்கை சிறந்ததாக காணப்பட்டாலும் அதனை செயற்படுத்தியவர்கள் பல தருணங்களில் தவறிழைத்துள்ளார்கள்.கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற துரதிஷ்டவசமான சம்பவம் முழு அரசியல் கட்டமைப்பிற்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் சுயாதீன விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. பொருளாதாரம் மற்றும் சமூக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண சர்வக்கட்சிகளையும் உள்ளடக்கிய வகையில் இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்க தீர்மானித்தேன்.
தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண சகல தரப்பினருக்கும் வெளிப்படை தன்மையுடன் அழைப்பு விடுத்தேன்.
இடைக்கால அரசாங்கத்தில் ஒன்றினைவதற்கு பிரதான எதிர்க்கட்சிகள் இணக்கம் தெரிவிக்கவில்லை.முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகியதுடன் இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிப்பதாகவும் ஆரம்பத்தில் குறிப்பிட்டேன்,சர்வக்கட்சிகளையும் உள்ளடக்கிய வகையில் இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்க பொதுஜன பெரமுனவிடமிருந்து கிடைக்கப்பெற்ற ஒத்துழைப்பு திருப்தியளிப்பதாக அமையவில்லை.
தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு எவரும் ஒத்துழைப்பு வழங்காத காரணத்தினால் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமித்துள்ளேன். தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து மீள்வதற்கு முன்னெடுக்கும் தீர்மானம் அரசியல் கொள்கையினை அடிப்படையாக கொண்டதாக அமைய கூடாது என்பதை கருத்திற்கொண்டே இத்தீர்மானத்தை முன்னெடுத்தேன்.
வரலாற்றில் என்றும் இல்லாத வகையில் நாடு மோசமான பொருளாதார நெருக்கடியினை எதிர்க்கொண்டுள்ளது.எவரையும் குற்றஞ்சாட்ட விரும்பவில்லை. சவால்களை வெற்றிக் கொள்ள சகல தரப்பினரும் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
சமூக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது அவசியமாகும். அரசியல் நெருக்கடி தீவிரமடையும் ஒவ்வொரு தருணமும்,பொருளாதார நெருக்கடியும்,அதனுடனான சமூக நெருக்கடியும் தீவிரமடையும்.
அரசியல் கொள்கைகளுக்கு முன்னுரிமை வழங்காமல் நாடு என்ற ரீதியில் எதிர்க்கொண்டுள்ள நெருக்கடி நிலைமையில் இருந்து மீள்வதற்கு பொதுஜன பெரமுனவின் சகல உறுப்பினர்களும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு நிபந்தனையற்ற ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களிடம் வலியுறுத்தியுள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சுயாதீனத்தன்மையினை பாதுகாத்துக் கொண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இடைக்கால அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவோம் என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.