தங்க நாணயங்களை விற்க விரும்புபவர்கள் அங்கீகாரம் பெற்ற நகை விற்பனையாளர்களைத்தான் நாட வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பெண்களுக்கு தங்கம் மீது தனி மோகம் உண்டு. அதே வேளையில் பெண்கள் மட்டுமின்றி பெரும்பான்மையான இந்தியர்கள் தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள். அட்சய திருதியை அன்று தங்கம் வாங்குவதற்கு பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். தங்க நாணயங்களை வாங்க திட்டமிட்டால், சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.
தங்கத்தின் தூய்மை:
தங்கத்தின் தூய்மை கேரட் எனப்படும் அலகால் மதிப்பிடப்டுகிறது. அதிலும் தங்கத்தின் தூய்மையை அளவிடுவதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று 24 கேரட், மற்றொன்று 22 கேரட். தங்க நாணயம் 24 கேரட் எனில் நாணயத்தின் கலவையில் 24 பாகங்களும் தங்கத்தால் ஆனது என்று அர்த்தம். அதாவது 24 கேரட் தங்கம் 99.9 சதவீதம் தூய்மையாக இருக்கும். 22 கேரட் தங்கம் 91.67 சதவீதம் தூய்மையாக இருக்கும். அதாவது 22 கேரட் தங்க நாணயங்களில் 24 பாகங்களில் 22 பாகங்கள் தங்கத்தால் செய்யப்பட்டவை, மீதமுள்ள இரண்டு பாகங்கள் வேறு சில உலோகங்களால் ஆனவை. தங்க நாணயம் என்றதும் 24 கேரட்தான் கொண்டிருக்கும் என்று கருதிவிடக்கூடாது. நீங்கள் வாங்குவது 24 கேரட் தங்க நாணயமா? 22 கேரட் தங்க நாணயமா? என்பதை சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.
ஹால்மார்க்:
தங்கத்தின் தூய்மையை ஹால்மார்க் உறுதி செய்கிறது. தங்கப் பொருட்கள் பியூரோ ஆப் இந்தியன் ஸ்டாண்டர்ட் (பி.ஐ.எஸ்) எனப்படும் ஹால்மார்க்கிங் மையத்தில் சோதனை செய்யப்பட்டு சான்றளிக்கப்படுகின்றன. ஹால்மார்க் சான்றிதழ் பெற்றிருந்தால் அது தூய தங்கமாகும். தங்கத்தின் மீது ஹால்மார்க் முத்திரை பதிக்கப்பட்டிருக்கும். எனவே தங்க நாணயங்களை வாங்கும் முன் ஹால்மார்க் குறியீடுகளை சரிபார்த்து கொள்ளுங்கள்.
எடை:
தங்க நாணயங்களை வாங்குவதற்கு முன் அதன் எடை மற்றும் மதிப்பை கவனத்தில் கொள்ள வேண்டும். அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கியே ஆக வேண்டும் என்ற மன நிலையில் இருப்பவர்கள் தங்க நாணயங்களை தேர்வு செய்யலாம். ஏனெனில் தங்க நாணயங்கள் 0.5 கிராம் முதல் 50 கிராம் வரை கிடைக்கின்றன.
கட்டணம்:
முதலீடு நோக்கத்தில் தங்கம் வாங்குபவர்கள் தங்க நாணயங்களை தேர்ந்தெடுப்பது சிறந்தது. ஏனெனில் தங்க ஆபரணங்களுக்கு செய்கூலி, சேதாரம் கணக் கிடப்படும். அதனுடன் ஒப்பிடும்போது தங்க நாணயங்களுக்கு குறைந்த கட்டணமே வசூலிக்கப்படும். தங்க நகைகளை வடிவமைப்பதற்கு அதிக கைவினைத்திறன் தேவைப்படும். ஆனால் தங்க நாணயங்களை உருவாக்க அதிகம் சிரமப்பட வேண்டியிருக்காது. நகைக்கு பதிலாக தங்க நாணயமாக வாங்கும்போது விலை குறைவாக இருக்கும். அதன் மதிப்பும் அதிகரிக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
மறுவிற்பனை:
ரிசர்வ் வங்கியின் ஆணையின்படி, ஒரு நபர் ஒரு வங்கியில் இருந்து தங்க நாணயங்களை வாங்கினால், மீண்டும் அதை வங்கிக்கு விற்க முடியாது. தங்க நாணயங்களை விற்க விரும்புபவர்கள் அங்கீகாரம் பெற்ற நகை விற்பனையாளர்களைத்தான் நாட வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.