வீட்டுக்கு அழைத்து நடிகை பலாத்காரம் செய்த வழக்கில் வெளிநாட்டுக்கு தப்பி சென்ற நடிகர் விஜய்பாபு கேரளா திரும்பினால் முன்ஜாமீன் என்று நீதிமன்றம் உத்தரவு.
மலையாள சினிமா நடிகரும், தயாரிப்பாளருமான விஜய்பாபு மீது நடிகை ஒருவர் கொச்சி போலீசில் பாலியல் புகார் கொடுத்தார்.
அதில் நடிகர் விஜய்பாபு, தன்னை வீட்டுக்கு அழைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் நடிகர் விஜய்பாபு மீது வழக்கு பதிவு செய்தனர்.
இதனை அறிந்த நடிகர் விஜய்பாபு, வெளிநாடு தப்பி சென்றார். எனவே அவரை பிடிக்க கேரள போலீசார் இன்டர்போல் போலீசாரின் உதவியை நாடினர். போலீசாரின் தேடுதல் வேட்டை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து நடிகர் விஜய்பாபு ஜார்ஜியா நாட்டுக்கு தப்பி சென்றதாக கூறப்பட்டது. எனவே அங்கிருந்து அவரை இந்தியா அழைத்து வர போலீசார் முயற்சி மேற்கொண்டனர்.
இதற்கிடையே இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்க கேட்டு நடிகர் விஜய்பாபு கேரள நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது நேற்று விசாரணை நடந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம், நடிகர் விஜய் பாபுவுக்கு முன்ஜாமீன் வழங்க அவர் கேரளா திரும்ப வேண்டும். இதற்கான விமான டிக்கெட்டை அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அவர் டிக்கெட்டை தாக்கல் செய்த பின்பு அவரது ஜாமீன்மனு பரிசீலனை செய்யப்படும் என்று நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.