விவசாயிகளுக்கு தேவையான எரிபொருள்

இம்முறை நெற்செய்கைக்கு தேவையான எரிபொருளை விவசாயிகளுக்கு துரிதமாக வழங்கும் வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாட்டின் 25 மாவட்டங்களையும் உள்ளடக்கிய தெரிவு செய்யப்பட்ட 217 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் விவசாயிகளுக்கு எரிபொருள் வழங்கப்படும். இந்த வேலைத்திட்டம் தொடர்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர், இம்முறை பயிர்ச்செய்கைக்கு மேலதிக எரிபொருளை வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

விவசாய பணிப்பாளர் நாயகம் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் பட்டியலை விவசாய அமைச்சரிடம் கையளித்ததையடுத்து, அந்த எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக விவசாயிகளுக்கு தேவையான எரிபொருளை தொடர்ந்தும் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

2022 யால பருவம் ஏற்கனவே ஆரம்பமாகியுள்ளதுடன், நாட்டின் அனைத்து விவசாயப் பகுதிகளிலும் உள்ள விவசாயிகள் அனைவருக்கும் எரிபொருள் கிடைக்காததால் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கமநல சேவை நிலையங்களின் அனுமதி கடிதத்தை அங்கீகரிக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு சமர்ப்பித்து விவசாயிகள் தமது ஒவ்வொரு நெற்பயிர்களுக்கும் தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.