மத்திய வங்கி தொடர்பான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் அதன் தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராய்வதற்காக மத்திய வங்கி நேற்று முன் தினம் கோப் குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தது.
இதன்போது மத்திய வங்கி ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ.டி.லக்ஷ்மன், திறைசேரி செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல மற்றும் நியமன உறுப்பினர் சமந்த குமாரசிங்க மற்றும் சஞ்சீவ ஜயவர்தன அவர்கள் எதிர்த்த போதிலும் மாற்று விகிதத்தை 203 ரூபாவாக நிர்ணயிக்க தீர்மானித்ததாக கலாநிதி ராணி ஜயமஹா தெரிவித்தார்.
கோப் குழு கூட்டத்தின் போது SJB நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவிற்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
கடந்த காலத்தில் நாணய மாற்று விகிதத்தை மிதக்கவிடாது தக்கவைத்துக் கொண்டமையால் பாரிய தொகை இழக்கப்பட்டிருப்பதாக சமூகத்தில் நிலவும் கருத்துத் தொடர்பிலும் குழு வினவியது.
இது தொடர்பாகத் தீர்மானம் எடுக்கும் உரிமை நாணயச் சபைக்கே இருப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்தார். மத்திய வங்கியின் கையிருப்பைப் பயன்படுத்தி நாணய மாற்று விகிதத்தை தக்கவைத்துக் கொள்வதற்கு எடுத்த தீர்மானத்தை தானும், நாணயச் சபையின் உறுப்பினராக இருந்த சஞ்ஜீவ ஜயவர்த்தனவும் கடுமையாக எதிர்த்ததாக நாணயச் சபையின் முன்னாள் உறுப்பினர் கலாநிதி ராணி ஜயமஹா தெரிவித்தார்.
இருந்தபோதும் நாணயச்சபையின் உறுப்பினர்கள் மூவருடைய தீர்மானத்துக்கு அமைய நாணயமாற்று விகிதத்தை ஒரே தொகையில் தக்கவைக்கப்பட்டிருந்ததாகவும், அப்போது மத்திய வங்கியின் ஆளுநராக இருந்த பேராசிரியர் டபிள்யூ.டி.லக்ஷ்மன், திறைசேரியின் முன்னாள் செயலாளர் மற்றும் நியமிக்கப்பட்ட நாணயச் சபை உறுப்பினராக சமந்த குமாரசிங்க ஆகியோரின் விருப்பத்துக்கு அமைய இது மேற்கொள்ளப்பட்டதாகவும் இங்கு புலப்பட்டது.
வெளி தரப்பினரின் செல்வாக்கு இன்றி துல்லியமான தொழிநுட்ப காரணிகளின் அடிப்படையில் தீர்மானங்களை எடுக்கும் அதிகாரத்தை மத்திய வங்கிக்கு வழங்க வேண்டியதன் அவசியத்தை கோப் குழு வலியுறுத்தியது. அத்துடன், தற்போதைய நெருக்கடி நிலைமையை தீர்ப்பது தொடர்பில் இங்கு நீண்டநேரம் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்துக் கொள்ளும் வரையான பணயத்தில் எதிர்வரும் 3-4 மாத காலத்துக்குத் தேவையான அந்நியச் செலாவணியை ஈட்டிக்கொள்வது சிக்கலானதாக இருந்தாலும் இந்தச் சவாலை வெற்றிக் கொள்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக மத்திய வங்கியின் ஆளுநர் இங்கு தெரிவித்தார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையில் காணப்படும் எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு மத்தியில் அரசாங்க சேவையில் உள்ளவர்களைக் குறைந்தளவு பயன்படுத்தி பணிகளை முன்னெடுத்துச் செல்வது தொடர்பில் பொது நிர்வாக அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடி, எதிர்வரும் மூன்று வாரங்களில் நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான வேலைத்திட்டத்தை உடனடியாகத் தயாரிக்குமாறும் கோப் குழுவின் தலைவர், நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்த்தனவிடம் பரிந்துரைத்தார்.
அதேசமயம் நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடியைத் தீர்ப்பதற்கு எடுத்த முயற்சிகளுக்காக நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் ஆகியோரையும் கோப் குழுவின் தலைவர் இதன்போது பாராட்டினார்.