தயாரிப்பாளரான போனிகபூரின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி மர்ம நபர்கள் ரூ 3.82 லட்சம் பண பரிமாற்றம் செய்துள்ளனர்.
மறைந்த நடிகை ஸ்ரீதேவின் கணவர் மற்றும் தயாரிப்பாளரான போனிகபூர் பல படங்களை தயாரித்துள்ளார். இவர் தயாரித்த அஜித்குமாரின் வலிமை திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் சாதனை படைத்துள்ளது. மேலும், அஜித்குமாரின் அடுத்தபடமான எ.கே.61 படத்தையும் தயாரித்து வருகிறார்.
இந்நிலையில், போனிகபூரின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி மர்ம நபர்கள் ரூ.3.82 லட்சம் பண பரிமாற்றம் செய்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன் கிரெடிட் கார்டின் பில் கட்டவில்லை என்று போனிகபூருக்கு வங்கியில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதன் பின்னர்தான் போனிகபூருக்கு கிரெடிட் கார்ட் தவறாக பயன்படுத்தபட்டது தெரியவந்துள்ளது. மொத்தம் ஐந்து பரிவர்த்தணைகளில் இந்த மோசடி நடந்துள்ளது.
தனது வங்கி கணக்கில் இருந்து முறைகேடாக பண பரிமாற்றம் நடந்துள்ளதை அறிந்த போனி கபூர் மும்பை அம்போலி போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளார். மேலும், தனது கிரெடிட் கார்டு எண்களை குறித்து யாரும் கேட்கவில்லை. இது தொடர்பாக எந்த அழைப்பும் வரவில்லை என்றும் போனிகபூர் கூறியுள்ளார்.
போனிகபூர் கிரெடிட் கார்டை பயன்படுத்தும் போது அவரது விவரங்களை மர்ம நபர்கள் பெற்றிருக்கலாம் என்றும் குருகிராமில் உள்ள ஒரு நிறுவனத்தின் வங்கி கணக்கிற்கு பணபரிமாற்றம் நடந்துள்ளது என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த முறைகேடு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.