கருப்பைத்திசுக்கட்டி வரக்காரணமும்… அறிகுறியும்…

கருப்பைக்கு உள்ளும் சுற்றியும் வளரும் புற்று அல்லாத கட்டியே கருப்பைத்திசுக்கட்டி என அழைக்கப்படுகிறது. இந்த நோய் வரக்காரணமும், அறிகுறியையும் அறிந்து கொள்ளலாம்.

கருப்பைக்கு உள்ளும் சுற்றியும் வளரும் புற்று அல்லாத கட்டியே கருப்பைத்திசுக்கட்டி என அழைக்கப்படுகிறது. இது கருப்பைத் தசைக்கட்டி என்றும் சில சமயம் அழைக்கப்படும். கருப்பைச் சுவரின் உள்ளும் புறமும் வளரும் உயிரணுக்கள் மற்றும் பிற திசுக்களால் கருப்பைத்திசுக்கட்டி உருவாகிறது. இதன் காரணம் தெரியவில்லை. அதிக எடையும் உடல் பருமனுமே ஆபத்துக் காரணிகள். ஆப்பிரிக்க-அமெரிக்கர்களிடம் பெரும்பாலும் இது காணப்படுகிறது. அவை கருப்பையின் எந்த இடத்திலும் வளரலாம். இடத்தைப் பொறுத்துப் பெயர் பெறுகிறது.

* அகச்சுவர் கருப்பைத்திசுக்கட்டி: இவ்வகை, கருப்பைத் திசுக்களுக்குள் வளருகிறது. இது வளர மிகவும் பொதுவான இடம் இதுவே.
* நிணநீர்ச்சவ்வடி கருப்பைத்திசுக்கட்டி: இது கருப்பை வெளிச்சுவரில் இருந்து இடுப்புப் பகுதிக்குள் வளருகின்றது.
* சளிச்சவ்வடி கருப்பைத்திசுக்கட்டி: இது பொதுவாக கருப்பையின் உட்சுவரில் இருந்து நடுவை நோக்கிக் காணப்படுகிறது.
* தனிக்காம்பு கருப்பைத்திசுக்கட்டி: இது கருப்பையின் வெளிச்சுவரில் இருந்து வளர்ந்து ஒரு குறுகிய தனிக்காம்பில் இணைந்துள்ளது.

நோயறிகுறிகள்

கருப்பைத்திசுக்கட்டி உள்ள பல பெண்களுக்கு எந்த அறிகுறியும் இருக்காது. அறிகுறிகள் தொடர்ந்து காணப்பட்டால் அவற்றில் அடங்குவன:

* அதிக, வலியோடு கூடிய மாதவிடாய் அல்லது மாதவிடாய்களுக்கு இடையே உதிரப்போக்கு
* கீழ் வயிறு நிறைந்திருப்பது போல் உணர்வு
* அடிக்கடி சிறுநீர் கழித்தல்
* உடலுறவின் போது வலி
* கீழ் முதுகு வலி
* மலட்டுத்தன்மை, பலதடவை கருக்கலைவு அல்லது முன்கூட்டியே குழந்தை பிறத்தல் போன்ற இனப்பெருக்க பிரச்சினைகள்

காரணங்கள்

மென்மையான தசையணுக்களின் மிகை வளர்ச்சியே கருப்பைத்திசுக்கட்டி. கருப்பை பெரும்பாலும் மென்மையான தசைகளால் உருவாக்கப்பட்டுள்ளது. சரியான காரணம் இன்னும் அறியப்படவில்லை:

* மரபியல் காரணமாக இருக்கலாம்
* முட்டைப்பையில் உருவாகும் பெண் இயக்குநீரால் கருப்பைத்திசுக்கட்டி பாதிப்படைகிறது. இந்நீர் அதிகமாகும்போது கருப்பைத்திசுக்கட்டி ஊதுகிறது; உதாரணமாகக் கர்ப்பகாலத்தில். மாதவிடாய் நின்ற பின் பெண் இயக்குநீர் குறைவடையும் போது கட்டி சுருங்குகிறது.

நோய் கண்டறிதல்

உடல் பரிசோதனை: மருத்துவர் உள்ளாய்வு (கருப்பை) நடத்தும் போது கருப்பைத்திசுக் கட்டியைக் கண்டறியலாம்.

கருப்பை ஊடுறுவல் கேளா ஒலி: கருப்பைத்திசுக்கட்டியைக் கண்டறிய இச்சோதனை சிலசமயம் பயன்படுத்தப்படுகிறது. இது வலியற்ற சோதனை. கருப்பைக்குள் ஒரு சிறு கருவி நுழைக்கப்படுகிறது. ஒலி அலைகள் மூலம் கருப்பையின் பிம்பம் தொலைக்காட்சி திரையில் உருவாக்கப்படுகிறது.

அகநோக்கு அறுவை: இம்முறையில் புகைப்படக் கருவி இணைக்கப்பட்டுள்ள குழாய் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் வயிறு அல்லது இடுப்பின் உட்பகுதி ஒரு தொலைக்காட்சித் திரையில் பிம்பமாக மாற்றப்படுகிறது. அகநோக்குக் கருவி வளையும் அல்லது விறைப்பானதாக இருக்கலாம். ஆனால் கருப்பைத்திசுக்கட்டியைக் கண்டறிய விறைப்பான ஒன்று பொதுவாக பயன்படுத்தப்படுகிறது.

துல்லியமாகக் கண்டறிய மருத்துவரை அணுகவும்.