இலங்கைக்கு சில மருந்து வகைகளை வழங்க முன் வந்துள்ள உலக சுகாதார அமைப்பு!

இலங்கைக்கு அத்தியவசிய மருந்துகளை பெற்றுக்கொடுக்க தலையீடுகளை மேற்கொள்ள உலக சுகாதார அமைப்பு தீர்மானித்துள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இலங்கை எதிர்நோக்கும் மருந்து தட்டுப்பாடு சம்பந்தமாக விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் உலக சுகாதார அமைப்பு இந்த முடிவை எடுத்துள்ளது.

18 ஆயிரம் மருந்து வகைகள் தேவை

இதற்கு முன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் அசேல குணவர்தன, உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்திருந்தார்.

இலங்கைக்கு 18 ஆயிரம் மருந்து வகைகள் தேவைப்படுவதாக உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதிகள் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த மருந்துகளை மூன்று மற்றும் ஆறு மாத காலத்திற்குள் வழங்க முடியுமா என்பதை உலக சுகாதார அமைப்பு ஆராய்ந்து வருகிறது.

அத்தியவசியமாக தேவைப்படும் மருந்துகள்

இந்த மருந்துகளில் 20 வகைக்கும் மேலான மருந்துகள் அத்தியவசியமாக தேவைப்படும் மருந்துகள் மற்றும் சத்திர சிகிச்சை உபகரணங்களை வழங்குமாறு இலங்கை பிரதிநிதிகள் உலக சுகாதார அமைப்பிடம் கோரியுள்ளனர்.

இலங்கைக்கு தேவையான மருந்துகளை பெற்றுக்கொடுப்பதற்காக சுகாதார அமைப்பு ஏனைய உலக நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதேவேளை சீனா வழங்கியுள்ள மருந்து தொகை அடுத்த மூன்று நாடகளில் கிடைக்க உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையில் வைத்தியசாலைகளில் நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு தேவையான மருந்துகளுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதன் காரணமாக நோயாளிகள் மூலம் தனியார் மருந்தங்களில் இருந்து மருந்துகள் கொள்வனவு செய்யப்பட்டு சிகிச்சை வழங்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.