அருளை அள்ளித் தரும் அம்மன் தலங்கள்

அம்பாளின் மேன்மை அடங்கிய பல திருத்தலங்கள், தமிழ்நாட்டில் இருக்கின்றன. அவற்றில் முக்கியமான சில ஆலயங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

அம்பாளை வழிபடும் சமயத்தை ‘சாக்தம்’ என்று அழைப்பார்கள். அம்மனையே, இந்த உலகத்தின் மூலமுதற்கடவுளாகக் கொண்டது, அந்த சமயத்தின் கொள்கை. அம்பாளின் மேன்மை அடங்கிய பல திருத்தலங்கள், தமிழ்நாட்டில் இருக்கின்றன. அவற்றில் முக்கியமான சில ஆலயங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

மதுரை மீனாட்சி

மதுரையின் முக்கிய அடையாளமே, மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம்தான். வைகை ஆற்றின் தென் பகுதியில் 10 ஏக்கர் பரப்பளவில் 14 கோபுரங்களும், 5 நுழைவு வாசல்களும் கொண்டு பிரமாண்டமாக அமைந்த திருக்கோவில் இது. சிவபெருமானின் திருவிளையாடல்கள் அனைத்தும் நடைபெற்றது மதுரை நகர் என்றாலும், இங்கு மீனாட்சியோடு இணைந்து சுந்தரேஸ்வரரும் கோவில் கொண்டுள்ளார் என்றாலும், இந்த ஆலயத்தில் அம்பாளுக்கே முதல் மரியாதை. தங்கத் தேர் உள்ள ஆலயங்களில், மதுைர மீனாட்சி அம்மன் ஆலயமும் ஒன்று. இந்த ஆலயத்தில் கடம்ப மரமும், வில்வ மரமும் தல விருட்சங்களாக உள்ளன.

காஞ்சி காமாட்சி

காஞ்சிபுரம் என்றாலே அங்கு வீற்றிருக்கும் காமாட்சி அம்மன்தான் அனைவரின் நினைவுக்கும் வருவார். அந்த அளவுக்கு பக்தர்களின் மனதில் இடம் பிடித்தவர், காமாட்சி தேவி. காஞ்சிபுரத்தின் மையப்பகுதியில் அமைந்த இந்த ஆலயம், 51 சக்தி பீடங்களில் ‘காமகோடி சக்தி பீடம்’ என்று அழைக்கப்படுகிறது. இத்தல அம்பிகை, தங்க விமானத்தின் கீழ் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களுக்கும், இந்த அன்னையே பிரதான சக்தி தேவியாவார். அதனால் காஞ்சிபுரத்தில் உள்ள சிவாலயங்களில், தனியாக அம்பாள் சன்னிதி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆலயத்தின் தல விருட்சம் செண்பக மரம் ஆகும்.

கன்னியாகுமரி பகவதிதேவி

முக்கடல் சங்கமிக்கும், தமிழ்நாட்டின் தென்கோடியில் அமைந்த ஊர், கன்னியாகுமரி. இங்கு கடற்கரையோரமாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறாள், பகவதி அம்மன். இந்த அம்பாள் கொலுவிருக்கும் ஆலயம், 51 சக்தி பீடங்களில் ‘குமரி சக்தி பீடம்’ என்று அழைக்கப்படுகிறது. இது அம்பாளின் முதுகுப் பகுதி விழுந்த சக்தி பீடமாக கருதப்படுகிறது. உள்நாட்டு பக்தர்கள் மட்டுமின்றி, வெளிநாட்டு பக்தர்களும் வந்து செல்லும் சிறப்பு மிக்க ஆலயமாக இந்த ஆலயம் திகழ்கிறது. பரசுராமர், பகவதி அம்மனின் திருவுருவத்தை இந்த இடத்தில் அமைத்து வழிபட்டிருக்கிறார். இங்குள்ள அம்பாள், குமரிப் பெண்ணாக (திருமணமாகாத கன்னிப் பெண்ணாக) இருந்து அருள்புரிகிறார். பாணாசுரை அழிப்பதற்காக, தேவி பராசக்தியே பகவதி அம்மனாக அவதரித்ததாக தல புராணம் சொல்கிறது.

சமயபுரம் மாரியம்மன்

திருச்சியில் இருந்து சுமார் 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சமயபுரம் என்ற ஊர். இங்குள்ள மாரியம்மன், ஊர் பெயரோடு சேர்த்து ‘சமயபுரம் மாரியம்மன்’ என்றே அழைக்கப்படுகிறார். கண்நோய் தீர்க்கும் சிறப்பு மிக்க தலமாக இந்த ஆலயம் விளங்குகிறது. வேப்பிலை ஆடை தரிப்பது, தீச்சட்டி ஏந்தி அம்பாளை வழிபடுவது, கண்மலர் வாங்கி காணிக்கை செலுத்துவது போன்றவை, இங்கு முக்கியமான நேர்த்திக்கடன்களாக இருக்கின்றன. மாசி மாதத்தில் இங்கு நடைபெறும் ‘பூச்சொரிதல்’ விழா மிகவும் பிரசித்திப்பெற்றது. அதே போல் சித்திரை மாதம் நடைபெறும் தேர்த் திருவிழாவும் மிகவும் பிரபலம். ஆண்டு தோறும் சித்திரை மாத முதல் செவ்வாய்க்கிழமையில், தேரில் பவனி வந்து அம்மன் அருள்பாலிப்பதைப் பார்க்க லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். இந்த ஆலயத்தின் தல விருட்சம் வேம்பு.

பொள்ளாச்சி மாசாணியம்மன்

கோயம்புத்தூரில் இருந்து சுமார் 28 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது மாசாணியம்மன் கோவில். இந்த ஆலயம் அமைந்துள்ள இடம் ஆனைமலை என்ற ஊராகும். உப்பாற்றின் வடகரையில் இருக்கிறது இந்த ஆலயம். மயானத்தில் சயன கோலத்தில் இருப்பவள் என்பதால் இந்த அன்னைக்கு ‘மயானசயனி’ என்ற பெயர் ஏற்பட்டது. அதுவே மருவி ‘மாசாணி’ என்றானதாக சொல்கிறார்கள். இங்கு மாசாணியம்மன், 17 அடி நீளத்தில் கிடந்த கோலத்தில், தெற்கே தலை வைத்து, கபாலம், சர்ப்பம், திரிசூலம், உடுக்கை ஏந்தி காட்சியளிக்கிறார். ருதுவாகும் பெண்கள் சந்திக்கும் பல்வேறு வகையான உடல் பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் தெய்வமாக, மாசாணியம்மன் அருள்பாலிக்கிறார். இந்த ஆலயத்தில் தை மாதம் 18 நாட்கள் நடைபெறும் பெருவிழா சிறப்புமிக்கது.