பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு நிபந்தனையுடன் உதவி தயார் என பைடனுக்கான தமிழர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் இனப் பிரச்சனைக்கு தீர்வு வழங்க இணக்கம் வெளியிட்டால் 52 பில்லியன் டொலர் வழங்க தயார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை செலுத்த வேண்டிய வெளிநாட்டு கடனை செலுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு புலம்பெயர் தமிழ் மக்கள் தயாராக உள்ளதாக “பைடனுக்கான தமிழர்கள்” அமைப்பின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர்ந்த தமிழர்கள் இலங்கைக்கு அதன் வெளிநாட்டுக் கடனில் 52 பில்லியன் டொலரை செலுத்த உதவுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பைடனுக்கான தமிழர்கள் அமைப்பு பல்வேறு ஆதாரங்களுடன் பல பொறுப்பு வாய்ந்த அமைப்புகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி, இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்தும், தமிழர்களை இலங்கை அடக்குமுறை மற்றும் இனப்படுகொலையிலிருந்தும் காப்பாற்றும் யோசனையை வகுத்துள்ளார்கள்.
ஈழத்தமிழர்கள் என்ற பெருமையுடன் அழைக்கும் இலங்கையைச் சேர்ந்த இரண்டு மில்லியன் தமிழர்கள் வெளிநாடுகளில் வாழ்கின்றனர்.
அவர்களில் பெரும்பாலானோர் நிதி வசதி படைத்தவர்கள். உயர் கல்வி கற்றவர்கள் மற்றம் பல்வேறு துறைகளில் நன்கு பயிற்சி பெற்றவர்கள். ஒரு இறைமையுள்ள தமிழ்த்தேசம் பொருளாதாரச் சிக்கலின்றி வாழக்கூடியது.
தமிழ் தேசத்தில் பொருளாதாரம், பிற நிறுவனங்களை நடத்துவதற்கு புலம்பெயர் தேசத்தின் திறமையான உறுப்பினர்களை தமிழர்கள் கொண்டு வருவார்கள்.
இலங்கை இணக்கமான பிரிவினைக்கு இணங்கினால் இலங்கையின் வெளிநாட்டு கடனை செலுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாதிடுவதற்கு புலம்பெயர் தமிழ் மக்கள் தயாராக உள்ளதாகவும் பைடனுக்கான தமிழர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.