பயன்படுத்தப்படாத நிலங்ககளில் பயிரிடுவதற்கான வேலைத்திட்டம்
இலங்கையில் பெருந்தோட்ட நிறுவனங்களுக்குச் சொந்தமான பயன்படுத்தப்படாத நிலங்களை கண்டறிந்து, உணவுப் பயிர்களைப் பயிரிடுவதற்கான துரித வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.
பெருந்தோட்டத் துறையில் தொழிற்சாலைகள் மற்றும் ஏனைய தேவைகளுக்காக எரிபொருளை வழங்குவது தொடர்பிலும் அரச தலைவர் அவதானம் செலுத்தியுள்ளார்.
பெருந்தோட்டத்துறை எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் கொழும்பு கோட்டையிலுள்ள அரச தலைவர் மாளிகையில் நேற்று மாலை கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது இலங்கையில் பெருந்தோட்ட நிறுவனங்களுக்குச் சொந்தமான 9 ஆயிரம் ஹெக்டேர்களுக்கும் அதிகமான நிலங்கள் பயிரிடப்படாத நிலையில் காணப்படுவதாக அரச தலைவர் சுட்டிக்காட்டினார்.
இதனால் 23 தோட்ட நிறுவனங்களுக்குச் சொந்தமான அந்தக் காணிகளில் பயிரிடுபவர்களுக்கு அவற்றை வழங்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
அரச தலைவரது பணிப்புரை
அத்துடன் தேயிலை ஏற்றுமதியினால் நாட்டிற்குக் கிடைக்கும் அந்நியச் செலாவணி வெளிப்படைத் தன்மையுடன் பேணப்பட வேண்டும் எனவும் அதற்காக தேயிலை ஏலத்தை டொலர்களில் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து உடனடியாக ஆராயுமாறும் அரச தலைவர் வலியுறுத்தினார்.
பெருந்தோட்டத் துறையில் தொழிற்சாலைகள் மற்றும் ஏனைய தேவைகளுக்காக எரிபொருளை வழங்கும் போது முறையான வேலைத்திட்டமொன்றின் அவசியம் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.
அமைச்சு அல்லது பிரதேச செயலாளரின் பரிந்துரையுடன் தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு நியமிக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து எரிபொருளை விநியோகிப்பதற்கு முன்னுரிமை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.