சமகாலத்தில் பிரதமராக செயற்படும் ரணில் விக்ரமசிங்கவின் செயற்பாடுகள் ராஜபக்சர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
21ஆவது அரசியலமைப்பு திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுமாக இருப்பின் பல நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவி பறிபோகும் நிலைய ஏற்படும்.
இரட்டை குடியுரிமை கொண்டவர்களை குறி வைக்கும் வகையில் இந்த திருத்தம் அமையவுள்ளது. இதன்மூலம் பசில் ராஜபக்சவின் அரசியல் எதிர்காலம் கேள்விக் குறியாக மாறியுள்ளது.
ராஜபக்சர்களுக்கு அதிர்ச்சி
ஏற்கனவே தென்னிலங்கை மக்கள் மத்தியில் பின்னடைவு கண்டுள்ள ராஜபக்சர்களுக்கு இந்த மாற்றம் பெரும் அதிர்ச்சிகரமானதாக மாறியுள்ளது.
இந்நிலையில் ரணிலை பதவியில் இருந்து அகற்றும் வேலைகளை திரைமறைவில் பசில் ராஜபக்ச மேற்கொண்டு வருகிறார்.
இதனொரு கட்டமாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தோல்வியடைந்து விட்டார் என கூறி “Ranil fail” என்ற பிரச்சாரத்தை முன்னெடுக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பு ஊடகங்கள் மற்றும் சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் தயாராகி வருகின்றனர்.
தோல்வி அடைந்த ரணில்
ரணில் விக்ரமசிங்க பிரதமராகி பல வாரங்கள் ஆகியும் இதுவரை வாக்குறுதி அளித்தபடி பல பில்லியன் அமெரிக்க டொலர் அந்நிய செலாவணியை கொண்டு வரமுடியவில்லை. மக்கள் மூன்று வேளை உணவு உண்ண கூடிய சூழலை உருவாக்குவதற்காக, விலைவாசியை குறைக்க முடியவில்லை. குறித்த விடயங்களை அடிப்படையாக கொண்டு பிரச்சார நடவடிக்கை ஒன்றை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தாமரை மொட்டு அணி மற்றும் சுயேட்சை அணி என இரண்டு முனைகளில் இருந்து ஒரே நேரத்தில் பிரச்சார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தகவல் வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
இலங்கையின் சமகால நெருக்கடி
இதற்கு முன்னர் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினால் முன்னெடுக்கப்பட்ட வெற்றிகரமான “Sir Fail” பிரச்சாரத்தை போன்று “Ranil fail” பிரச்சாரமும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய பிரதமராக பதவியேற்ற ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு நிம்மதியளிக்கும் வகையில் எந்தவொரு சாதகமான தகவல்களையும் வெளியிடவில்லை. நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போதும் சரி, ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதும் சரி, நாடு வங்குரோத்து அடைந்துள்ளது. பட்டினி தலைவிரித்தாடவுள்ளது. மக்கள் இரண்டு வேளை மட்டுமே உணவு உட்கொள்ள முடியும். இனிவரும் காலங்கள் மிகவும் ஆபத்தானவை என்பதை தெரிவித்து வருகிறார்.
பிரதமர் தெரிவிக்கும் விடயங்கள் உண்மையானவை என்ற போதிலும் மாற்றம் ஒன்றை எதிர்பார்த்திருக்கும் மக்களுக்கு இந்த தகவல் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.