இந்தியாவில் பெரும்பாலான வீடுகளில் தயிர் தினமும் புழக்கத்தில் இருக்கிறது. தயிர் சாதமாக மட்டுமின்றி இனிப்பு லஸ்ஸி, குளிர்ச்சியான சாஸ், ரைத்தா, தாகி வடை என பல வகைகளில் ருசிக்கப்படுகிறது. லக்டோபேசிலஸ் டெல்புருக்லி எனப்படும் பாக்டீரியாக்களால் பால் நொதிக்கப்பட்டு தயிர் தயாராகிறது.
இந்த பாக்டீரியா நொதித்தல் செயல்முறையின்போது லாக்டிக் அமிலம் உருவாக்கப்படுகிறது. இது தயிர் அடர்த்தியாக இருப்பதற்கு காரணமாகிறது.
இந்தியா மட்டுமின்றி உலகளவில் ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாக தயிர் கருதப்படுகிறது. தினமும் உணவுடன் சிறிதளவு தயிர் சேர்த்துக்கொள்வதால் கிடைக்கும் 10 நன்மைகள் பற்றி பார்ப்போம்.
பற்கள் – எலும்புகளை வலிமையாக்கும் தயிரில் கலந்திருக்கும் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் பற்கள் மற்றும் எலும்புகளை வலிமையாக்க உதவும்.
கீல்வாதத்தை தடுக்கும். எலும்புகள் மற்றும் பற்கள் வலுவாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதற்கு தினசரி உணவில் ஒருமுறையேனும் தயிர் சாப்பிட முயற்சி செய்யுங்கள்.
நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் தயிர் சிறந்த புரோபயாடிக் உணவுகளில் ஒன்றாகும். இது உடலுக்கு நன்மை பயக்கும் நேரடி நுண்ணுயிரிகளைக் கொண்டுள்ளது.
புரோபயாடிக்குகள் பல நோய்த்தொற்றுகளை தடுக்கும் தன்மை கொண்டவை. ஒட்டுமொத்தமாக உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தக்கூடியவை.
சந்தையில் கிடைக்கும் அனைத்து தயிர்களும் புரோபயாடிக் தன்மை கொண்டவை அல்ல. அதன் லேபிளில் ‘லைவ் ஆக்டிவ் கல்சர்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறதா என்பதை கவனித்து வாங்க வேண்டும்.
யோனிக்கு நலம் சேர்க்கும் தயிரில் உள்ள நல்ல பாக்டீரியா, யோனியின் ஆரோக்கியம் காக்கக்கூடியது. பி.எச். சம நிலையை சீராக பராமரித்து யோனியின் நலனை மேம்படுத்தும்.
அதனால் பெண்கள் எந்த வகையான தயிரையும் உட்கொள்ளலாம். இதயத்திற்கு நல்லது தினமும் தயிர் சாப்பிடுவது உடலில் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும்.
இதனால் ரத்த அழுத்தம் ஏற்படும் அபாயம் குறையும். கொலஸ்ட்ரால் அளவை சீராக வைத்து இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்க வழிவகுக்கும்.
ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் தயிரில் உள்ள எளிதில் ஜீரணிக்கக்கூடிய புரதம், ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. ‘
கிரீக் யோகர்ட்’ எனப்படும் தயிர் இதய நோய் அபாயத்தை குறைப்பதாகவும், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இனிப்பு கலந்த தயிர் மற்றும் பழங்கள், பிற உணவு பொருட்கள் கலந்து தயாரிக்கப்படும் தயிர் வகைகளை தவிர்ப்பது நல்லது. பளபளப்பான சருமம்- கூந்தலை பெற உதவும் தயிர் அழகு சாதனப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.
தயிர், எலுமிச்சை சாறு, கடலை மாவு இந்த மூன்றையும் ஒன்றாக கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவி விடலாம்.
தயிர் சிறந்த பிளீச்சிங்காக செயல்பட்டு சரும அழகை மெருகேற்றும். ஆரோக்கியமான, பளபளப்பான கூந்தலை பெறவும் தயிரை உபயோகப்படுத்தலாம்.
உடல் எடையை குறைக்கும் கார்டிசோல் ஹார்மோனின் ஏற்றத்தாழ்வு மற்றும் தவறான வாழ்க்கை முறை காரணமாக இடுப்பைச் சுற்றி அதிக கொழுப்பு சேரும். தயிரில் கால்சியம் நிறைந்துள்ளது.
இது கார்டிசோலின் உற்பத்தியை குறைக்க உதவும். உடல் எடையை குறைக்கவும் துணை புரியும். தயிர் சாப்பிட்டால் நீண்ட நேரம் குடலுக்கு இதமாக இருக்கும்.
மேலும் கலோரி உட்கொள்ளலைக் குறைப்பதன் மூலம் தொப்பையை கட்டுப்படுத்தவும் உதவும்.
பொடுகை நீக்கும் பொடுகை எதிர்த்துப் போராடுவதற்கான சிறந்த வீட்டு வைத்தியங்களில் ஒன்றாக தயிர் அமைந் திருக்கிறது.
தயிரில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு பண்புகள், பொடுகை நீக்க சிறந்த தீர்வாக அமைகிறது. மருதாணி இலைகளை நன்றாக அரைத்து அதனுடன் தயிர் கலந்து தலையில் தடவி அரை மணி நேரம் கழித்து கழுவி வரலாம். இது பொடுகைப் போக்குவதோடு மட்டுமல்லாமல், தலைமுடியை பளபளப்பாகவும் மென்மையாகவும் மாற்றும்.
செரிமானத்திற்கு துணைபுரியும் தயிரில் உள்ள புரோபயாடிக்குகள் செரிமான மண்டலத்தின் சீரான செயல்பாட்டிற்கு உதவுகின்றன. தயிர் எளிதாக ஜீரணமாகக்கூடியது. மேலும் நொதித்தல் செயல்பாட்டின் போது லாக்டோஸ் உடைக்கப்படுவதால் குடல் ஆரோக்கியத்திற்கு உகந்தது
ஆற்றல் அளிக்கும் உடலுக்கு போதுமான அளவு ஆற்றலை எதிர்பார்க்கிறீர்கள் என்றால், தயிரை தவறாமல் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த தயிர் உடலுக்கு ஊக்க சக்தியை அதிகரிக்கும். இது ஒரு ஆக்ஸிஜனேற்றியாக வேலை செய்கிறது. உடற்பயிற்சிக்கு முன்பு சாப்பிடுவதற்கு சிறந்த உணவாக தயிர் கருதப்படுகிறது.