இன்றைய பொருளாதார சூழ்நிலையில் பெண்களின் வருமானம் குடும்பத்துக்கு அவசியமானது. கல்வியறிவு இல்லாதவர்களும் சுய தொழில் மூலம் வருமானம் ஈட்ட முடியும். அனைவருக்கும் ஒரு தனித்திறமை இருக்கும். அதை மூலதனமாக வைத்து முயற்சிக்க வேண்டும். அவரவர் நிதி நிலைக்கு ஏற்றவாறு சுயமாக தொழில் செய்தால், வருவாய் ஈட்டுவதுடன், மனநிறைவுடனும் வாழலாம்.
குடும்பத் தலைவிகள் மற்றும் அலுவலகப் பணியில் இருந்து விலகி இருப்பவர்கள் செய்வதற்கான சிறந்த சுயதொழில் திட்டங்கள் சிலவற்றை பார்ப்போம். வெளியூரில் தங்கி படிப்பவர்களுக்கும், வேலை செய்பவர்களுக்கும் ஆரோக்கியமான வீட்டு உணவு கனவுதான். நன்றாக சமைக்கத் தெரிந்த பெண்கள், வீட்டு சாப்பாடு தரத்தில் கேட்டரிங் தொழில் செய்யலாம்.
இது புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு பாதுகாப்பான ஆரம்பமாக இருக்கும். சரியான நேரம் மற்றும் இடத்தை தேர்வு செய்து கேட்டரிங் ஆரம்பித்தால், சிறந்த லாபம் தரும் தொழில்களில் இதுவும் ஒன்று. கேட்டரிங் போல் பேக்கரியும் லாபம் தரக்கூடிய தொழில் தான்.
உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் பண்டங்கள் இல்லாமல், சிறுதானியங்களை பயன்படுத்தி அதே பண்டங்களை தயார் செய்து கொடுத்தால் வாங்குபவர், விற்பவர் இருவருக்கும் லாபம் கிடைக்கும். தனித்தன்மையுடன் யோசித்தால் அனைவரது கவனத்தையும் எளிதில் ஈர்க்கலாம்.
வேலைக்குச் செல்லும் பெண்கள் அதிகரித்துக் கொண்டிருக்கும் இக்காலத்தில், குழந்தைகளை சீராக வளர்க்க வேண்டுமே என்ற வருத்தம் அனைவருக்கும் உள்ளது. நீங்கள் குழந்தைகள் வளர்ப்பில் ஆர்வம் உள்ளவராக இருந்தால், உங்கள் குழந்தைகளுடன் சேர்த்து மற்ற குழந்தைகளையும் பராமரிக்க மையம் ஆரம்பிக்கலாம்.
இதன் மூலம் வருமானத்துடன், மகிழ்ச்சியும் அதிகரிக்கும். செல்லப்பிராணிகள் வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர் என்றால் அது தொடர்பான ஆலோசனைகள் கொடுப்பது, ஓய்வு நேரத்தில் வாடிக்கையாளர்களின் செல்லப் பிராணியை கவனித்து கொள்வது, நடைப்பயிற்சிக்கு கூட்டி செல்வது போன்ற சேவைகள் செய்து அதற்கு ஏற்ற கட்டணம் வசூலித்து சம்பாதிக்கலாம்.
மேலே குறிப்பிட்ட வழிகளை செய்வதுடன், சமூக ஊடகங்களில் நீங்கள் செய்வதை ஆலோசனை காணொளியாக பதிவு செய்து பகிர்ந்தால் அதன் மூலமாக வருமானம் ஈட்ட முடியும். இதற்காக தனியாக பயிற்சி தேவை இல்லை. முறையாக அரசாங்கத்தில் பதிவு செய்து நடத்தினால், பெண்களுக்கான அரசின் சில சலுகைகளையும் பெறலாம். இவை உங்கள் அன்றாட வாழ்வில் நீங்கள் விரும்பி செய்யும் வேலைகளின் மூலம் வருவாய் ஈட்ட இருக்கும் வழிகள்.
இதைப் போலவே ஓவியம் வரைதல், சிறு சிற்பங்கள் வடித்தல், செராமிக் ஆர்ட், தையல், வீட்டை அழகுப்படுத்துதல் போன்ற பல வழிகள் உள்ளன.