கொழும்பில் உள்ள அதிகாரபூர்வமற்ற கறுப்பு நிதி சந்தையில் அமெரிக்க டொலர் உட்பட வெளிநாட்டு நாணயங்களின் விற்பனை விலைகள் பெருமளவில் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
டொலரின் விலை
சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர் டொலர் ஒன்றின் விற்பனை விலையானது அங்கீகாரம் பெற்ற வங்கிகளின் நாணய மாற்று விகிதங்களை விட 75 ரூபாய் அதிக விலைக்கு விற்பனை செய்யும் சந்தர்ப்பங்கள் காணப்பட்டன.
எனினும் இலங்கை மத்திய வங்கியின் தற்போதைய நாணய மாற்று விகிதங்களுக்கு அமைய டொலர் ஒன்றின் விற்பனை விலை 365 ரூபாய் என பதிவாகியுள்ள நிலையில், கொழும்பு கறுப்பு நிதிச் சந்தையில் ஒரு டொலரின் விற்பனை விலை 379 ரூபாய் என்ற விகிதத்தில் உள்ளது.
மத்திய வங்கியின் விலையுடன் ஒப்பிடும் போது விற்பனை மட்டம் 14 ரூபாய் மாத்திரம் அதிகரித்து காணப்படுகிறது.
பவுண்ட் மற்றும் யூரோவின் விலைகள்
இதனிடையே அங்கீகாரம் பெற்ற வங்கிகளின் நாணய மாற்று விகிதத்திற்கு அமைய பிரித்தானிய ஸ்டேர்லிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 468 ரூபாய். கொழும்பு கறுப்பு நிதிச் சந்தையில் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 472 ரூபாய் என்ற மட்டத்தில் உள்ளது.
மத்திய வங்கியின் நாணய மாற்று விகிதத்திற்கு அமைய யூரோ ஒன்றின் விற்பனை விலை 395 ரூபாய். கொழும்பு கறுப்பு நிதிச் சந்தையில் யூரோ ஒன்றின் விற்பனை விலை 400 ரூபாயாக காணப்படுகிறது.
ஸ்டேர்லிங் பவுண் மற்றும் யூரோ ஆகியவற்றின் விலை கறுப்புச் சந்தையில் பெருமளவில் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.