இருளர் இன மக்களின் உண்மை சம்பவத்தை மையக்கருத்தாக கொண்டு உருவாக்கப்பட்ட படம் ‘ஜெய் பீம்’. இப்படத்தினை இயக்குநர் ஞானவேல் இயக்கி நடிகர் சூர்யா தயாரித்து நடித்திருந்தார். மணிகண்டன், பிரகாஷ் ராஜ், ரஜிஷா விஜயன், ராவ் ரமேஷ், லிஜோ மோல் ஜோ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘ஜெய் பீம்’ ஓடிடியில் வெளியானாலும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்தப்படத்தின் நிஜ நாயகியான பார்வதி அம்மாள் வறுமையில் இருப்பதாக கூறியிருந்தார். இதையடுத்து நடிகர் ராகவா லாரன்ஸ் பார்வதி அம்மாளுக்கு வீடு கட்டி தருவதாக தெரிவித்திருந்தார். ஆனால், பார்வதி அம்மாளுக்கு தமிழ் நாடு அரசு சார்பில் வீடு கட்டி தருவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ் , பார்வதி அம்மாளின் குடும்பத்தினரை தனது அலுவலகத்திற்கு அழைத்து அவருக்கு வீடு கட்டி தருவதற்காக ஒதுக்கிய தொகையை பார்வதி அம்மா மற்றும் அவருடைய மூத்த மகன் மாரியப்பா, இளைய மகன் ரவி, மகள் சின்னப்பொண்ணு ஆகியோருக்கு பிரித்து வழங்கினார். ராகவா லாரன்ஸின் இந்த செயலுக்காக ரசிகர்கள் பலரும் சமூக வலைதளத்தில் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.