யாழில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் ,மக்கள்

யாழ்ப்பாணம் வடமராட்சியில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக இன்றும் மக்கள் மிக நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருள் பெற்று சென்றுள்ளதுடன், பலர் எரிபொருள் முடிவடைந்த நிலையில் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர்.

மேலும், நான்கு நாட்களாக டீசலை பெற்றுக்கொள்வதற்காக வாகனங்களுடன் வீதிகளில் படுத்துறங்கிய நிலையில் இன்று(17) டீசல் வரும் எனும் நம்பிக்கையில் காத்திருக்கும் சம்பவங்களும் வடமராட்சி பகுதியில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், புலோலி பல கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெட்ரோல் நிறைவடைந்துள்ளதாக நிர்வாகத்தினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நிலையில் அங்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இதன் பின்னர் பொலிஸார் மற்றும் புலோலி பலநோக்கு கூட்டுறவு சங்க பொது முகாமையாளர் ஆகியோர் சமரசத்தில் ஈடுபட்டு சமாதானபடுத்திய நிலையில் நூற்றுக்கணக்கான மக்கள் திரும்பிச் சென்றுள்ளனர்.

மேலும் இங்கு காலை 7 மணி முதல் பத்து மணி வரை பெட்ரோல் வழங்கப்பட்டுள்ளது.

உடுப்பிட்டி
உடுப்பிட்டி பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தில் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களும் 400 வரையான முச்சக்கர வண்டிகளும் காத்திருக்கின்றன.

எனினும் அங்கு இதுவரை எரிபொருள் எதுவும் இல்லாத நிலையிலும் மக்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

நெல்லியடி
இதேவேளை நெல்லியடி பலநோக்கு கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசல் பெற்றுக்கொள்வதற்காகவும் மிக நீண்ட வரிசையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு அங்கு மூன்று நாட்களாக மக்கள் காத்திருக்கின்றார்கள்.

வல்வெட்டித்துறை
இதேபோன்று வல்வெட்டித்துறை எரிபொருள் நிரப்பு நிலைத்திலும் எரிபொருள் இல்லாத நிலையிலும் மக்கள் காத்திருக்கின்றனர் என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.