தென்னிலங்கை அரசாங்கம் பாரிய பொருளாதார, அரசியல் நெருக்கடிகளுக்கு உள்ளாகியிருக்கும் இந்தச் சூழலை தமிழ் மக்களின் விடிவுக்காக பயன்படுத்துவதற்கு அனைத்து தமிழ் தலைமைகளும் தலைப்பட வேண்டியது தவிர்க்க முடியாத விடயமென ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பொது செயலாளர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
ஜுன்-19, 32ஆவது, தியாகிகள் தினத்தினை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அறிக்கை
அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “விடுதலைக்காக தமது இன்னுயிர்களை ஈகம் செய்த அத்தனை தியாகிகளுக்கும்,ஏனைய அமைப்புக்களைச சேர்ந்த போராளிகள் பொதுமக்களுக்கும் நெஞ்சார்ந்த அஞ்சலிகளை செலுத்துகின்றோம். தற்போதை நிலையிலாவது அவர்களின் கனவுகளை நனவுகளாக்குவதற்கு முயற்சிகளை எடுக்க வேண்டி தலைப்பட்டிருக்கின்றோம்.
இலங்கை பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கி தவித்துக்கொண்டிருக்கின்றது. இதனால் அரசியல் நெருக்கடிகளும் ஏற்பட்டுவிட்டன. சர்வதேச நாணய நிதியத்தின் உதவி மற்றும் இதர நாடுகளின் நன்கொடைகளை பெற்றுக்கொண்டாலும் தற்போதைய பொருளாதார நெருக்கடி முற்றுமுழுதாக சீரடையும் என்று கூறுவதற்கு இல்லை.
கடன்களுக்கு மேல் கடன்களை பெற்றுக்கொள்ளும் முறையால் நாடு இன்னமும் மோசமான நிலைமைக்குள்ளேயே தள்ளப்படும் பேராபத்து இருக்கின்றது. இவ்வாறான தருணத்தில், பொருளாதார, அரசியல் நெருக்கடியில் இருக்கின்ற நிலையில் தமிழினத்தின் எதிர்காலம் சம்பந்தமான கோரிக்கைகள் தொடர்பாக எவ்விதமான நகர்வுகளையும் முன்னகர்த்துவது பொருத்தமற்றது என்றதொரு தோற்றப்பாடு கட்டியெழுப்பபட்டுள்ளது.
கோரிக்கைகள்
இது தவறானதொரு நிலைப்பாடாகும். இதற்கு கடந்தகால அனுபவங்கள் பல உள்ளன. குறிப்பாக கூறுவதானால், போர் நிறைவுக்கு வந்தவுடன் இனப்பிரச்சினைக்கான தீர்வு வழங்கப்படும் என்று ராஜபக்ஷக்கள் கூறினார்கள். பின்னர் போர் முள்ளிவாய்க்கால் பேரவலத்துடன் நிறைவுக்கு வந்தபோது, அவர்கள் போர் வெற்றிவாதத்தில் மிதந்தார்கள். இடிபாடுகளுக்குள் நல்லிணக்கம் பற்றி பேச முடியாது என்றார்கள்.
அபிவிருத்திகள் மேற்கொள்ளாது இனங்களுக்கு இடையில் பிரச்சினைகளை தீர்க்க முடியாது என்றார்கள். இவ்வாறு கூறி தற்போது 13 ஆண்டுகள் நிறைவுக்கு வந்துவிட்டன.
இவ்வாறான நிலையில் தற்போது தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழல் சுமூகமாகும் வரையில் தமிழ்த் தரப்பு அமைதியாக இருக்க வேண்டும் என்று கூறுவது பொருத்தமற்றதாகும்.
தற்போதைய சூழலை தமிழ்த் தரப்பு கையாள வேண்டும். முதலில் தற்போதைய நெருக்கடிகளின் மூலவேர் இனப்பிரச்சினை தான் என்பதை உறுதியாக வெளிப்படுத்த வேண்டும். அதனை தென்னிலங்கை சக்திகளையும் ஏற்றுக்கொள்ள செய்ய வேண்டும். அதற்குரிய மூலோபாய அணுகுமுறைகளை முன்னெடுக்க வேண்டும்.
அத்துடன், தற்போது இலங்கைக்கு தேவையான அத்தியாவசியமான பொருட்களை வழங்கும் வெளிநாடுகளில் இந்தியா முதன்மையானதாக உள்ளது. ஏற்கனவே தமிழர்கள் சார்பில் இந்தியா இலங்கையுடன் ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
அந்த வகையில் தற்போது நெருக்கடியான காலத்தில் இந்திய மத்திய அரசிடம், ஈழத் தமிழர்களின் விவகாரத்தினை கையாள்வதற்காக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுவதற்கான உந்துதலை தமிழ்த் தரப்புக்கள் கூட்டாக கோரிக்கை முன்வைக்க வேண்டும்.
தமிழ் தரப்புக்கள்
இந்த விடயத்தினை தமிழ்த் தரப்பு தந்திரோபய ரீதியாக முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும். உதவிகளை நிபந்தனைகளின் அடிப்படையில் வழங்குதல் என்ற தோற்றப்பாட்டுக்கு அப்பால் விடயத்தினை கையாள வேண்டும். இதற்கான தமிழ்த் தரப்புக்கள் ஒன்றிணைந்து உரிய செயற்றிட்டமொன்றை தயாரிக்க வேண்டியுள்ளது.
ஆனால், தமிழ் தரப்புக்கள் தற்போதைய நிலைமைகளை கையாள்வதற்கு தமக்குள் காணப்படுகின்ற தனிநபர் மற்றும் கட்சி அரசியல்களை கைவிட வேண்டியது அவசியமாகின்றது. அவ்விதமாக எந்தவொரு தரப்பினரும் முன்வருவதற்கு தயாரில்லாத சூழலில் தற்போதைய சூழ்நிலையில் தமிழ்த் தரப்பின் வகிபாகம் அற்றுப்போயுள்ளது.
வெறுமனே தென்னிலங்கை அரசியல் விடயங்களை கையாள முடியாது பார்வையாளர்களாக இருக்கும் நிலைமையும், இனப்பிரச்சினை தீர்வு, பொறுப்புக்கூறல் உள்ளிட்ட விடயங்கள் உறை நிலைக்கு சென்றுள்ள சூழலும் ஏற்பட்டுள்ளது.
ஆகவே, தற்போதைய சூழலை கையாள்வதற்கு தமிழ் தலைமைகள் ஒன்றிணைந்து தீர்மானிக்க வேண்டும். சந்தர்ப்பத்தினை பயன்படுத்திகொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம். கடந்த காலத்தில் எத்தனையோ சந்தர்ப்பங்கள் கைநழுவி சென்றிருக்கின்றன. இந்நிலையில் தற்போதைய சந்தர்ப்பத்தினை முறையாக பயன்படுத்துவதற்கு அனைவரும் முன்வரவேண்டும்.
தோழர் பத்மநாபா, கட்சிகளுக்கிடையில் ஐக்கியத்தை கட்டியெழுப்புவதற்காக ஈழத் தேசிய விடுதலை முன்னணி(ENLF) மற்றும் திம்பு பேச்சுவார்த்தையிலிருந்து வடக்கு கிழக்கு இணைந்த மாகாண அரசு உருவாக்கம் வரை அனைத்து சந்தர்ப்பங்களையும் பயன்படுத்துவதை தவிர்க்க கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். அத்துடன் தீர்க்க தரிசனமாகவும் பன்முக ஆளுமை கொண்டவராகவும் திகழ்ந்தார்.
குறிப்பாக, இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் மாகாண சபை முறைமையிலிருந்து அடுத்த கட்டம் நோக்கி செல்வதற்கான செயற்றிட்ட வரைபினை கைவசம் வைத்திருந்தார். ஆனால், அதற்கான சந்தர்ப்பத்தினை பல புறச்சக்திகள் அழித்துவிட்டன. அந்த தீர்க்க தரிசியின் சிந்தனையை ஏற்றுக்கொள்வதற்கு அந்தச் சக்திகள் மறுத்துவிட்டன.
அதன் பின்னர் ஏற்பட்ட உயிரிழப்புக்கள்,சொத்தழிவுகள் எண்ணி பார்க்க முடியாதவை. இனிவரும் காலத்திலாவது அவ்விதமான தவறினை செய்யாது சந்தர்ப்பத்தினை முறையாக பயன்படுத்த வேண்டும். அந்த தோழனின் தீர்க்க தரிசனக் கருத்துக்கள் தற்போதைய காலத்திற்கும் பொருத்தமானவை தான்.
அதனை நெஞ்சில் ஏற்றி தமிழர்களின் எதிர்காலத்தினை கட்டியமைப்பதற்காக பொது வேலைத்திட்டத்தின் கீழ் ஒரு கட்டமைப்பாக செயற்படுவதற்கு அனைவரும் கைகோர்ப்பதற்கு முன்வரவேண்டும். இதயசுத்தியான அம்முயற்சிக்கு எமது கட்சி என்றுமே ஆதரவளிப்பதற்கு தயாராகவே உள்ளது.” என கூறியுள்ளார்.