அரிசி ஆலைகளுக்கு சுற்றிவளைப்பு
நாடளாவிய ரீதியில் சட்ட விரோதமாக கூடிய விலையில் அரிசி விற்பனை செய்யும் ஆலைகளுக்கு எதிராக சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அம்பாறை
இவ்வாறு அம்பாறையில் அரிசி ஆலைகளுக்கு சுற்றிவளைப்பொன்று மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.
கடந்த ஞாயிறு அன்று அரிசி ஆலைகள் தொடர்பான முறைப்பாடுகள் காரணமாகவே இச்சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அம்பாறை நுகர்வோர் அதிகார சபையின் மாவட்ட தலைமை அதிகாரி சாலிந்த நவரத்ன பண்டார தலைமையிலேயே இச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் 2 ம் திகதி வெளியிடப்பட்ட அதி விஷேட வர்த்தமானியில் கட்டளை இலக்கம் 82 ல் சிவப்பு/வெள்ளை நாடு வேக வைத்த உள்நாட்டு அரிசியின் கட்டுப்பாட்டு விலை ஒரு கிலோவுக்கு 220 ரூபா என குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வாறு குறிக்கப்பட்ட விலையினை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்ட நபர்களையே சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தி தண்டப்பணம் விதித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிந்தவூர்
நிந்தவூர் பிரதேச எல்லைக்குள் அரிசி ஆலை ஒன்றிற்கு பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை புலனாய்வு உத்தியோகத்தர்கள் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாகவும் இதன் போது அவ் ஆலை உரிமையாளருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ் வழக்கானது கடந்த வெள்ளிக்கிழமை(17) சம்மாந்துறை நீதிமன்றில் எடுத்து கொள்ளப்பட்டுள்ளது எனவும் அச் சந்தேக நபருக்கு சுமார் 3 இலட்சம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறு நீதிவான் உத்தரவிட்டதாகவும் கூறப்படுகின்றது.
சந்தேக நபருக்கு 2021ம் ஆண்டின் 20ம் இலக்க பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் திருத்த சட்டத்தின் படியே இந்த தண்ட பணம் விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.