யாழில் வீடொன்றிலிருந்து சடலமாக மீட்க்கப்பட்டவர் தொடர்பில் வெளிவரும் உண்மைகள்

யாழ்.கீரிமலை பகுதியில் வீடொன்றில் சடலமாக மீட்கப்பட்ட நபர் கழுத்து நொிக்கப்பட்டே கொலை செய்யப்பட்டமை உடற்கூற்று பரிசோதனைகளில் அம்பலமாகியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

கடந்த 20 ஆண்டுகளாக கீரிமலை, புதிய கொலனியில் வசிக்கும் ச. நடராசா என்னும் 63 வயதுடைய ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று வீட்டில் நினைவிழந்திருந்த நிலையில் காணப்பட்டதாக அவரை தெல்லிப்பழை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

பரிசோதனைகளை மேற்கொண்ட மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிக்கையிட்டுள்ளனர்.

அவரது மரணத்தில் காங்கேசன்துறைப் பொலிஸார் சந்தேகம் கொண்டதால், உடற்கூற்றுப் பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனையில் இவர் கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் இருவர் காங்கேசன்துறைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 5 ஆயிரம் ரூபா பணம் திருடப்பட்டமை தொடர்பாக எழுந்த முரண்பாடு ஒன்றை அடுத்தே இந்தக் கொலை நடந்துள்ளது என்பது முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுவருவதாக காங்கேசன்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.