இலங்கையில் அரிசி விலை தொடர்பில் முறுகல்

இலங்கையில் அரிசி விலை தொடர்பில் நாட்டின் முன்னணி அரிசி வர்த்தகர்களுக்கு இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

நேற்றைய தினம் ஊடக சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் அரலிய அரிசி ஆலை உரிமையாளர் டட்லி சிறிசேன, நியூ ரத்ன அரிசி ஆலை உரிமையாளர் லங்கேஸ்வர மித்ரபால உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

வாக்குவாதம்
இதன்போது டட்லி சிறிசேன லங்கேஸ்வர மித்ரபால ஆகியோருக்கு இடையில் இந்த வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

லங்கேஸ்வர மித்ரபால அரிசியை கட்டுப்பாட்டு விலைக்கு வழங்க முடியாது என கூறியுள்ளார். எனினும், அரசி விலை அதிகரிப்பிற்கு இடமளிக்க போவதில்லை என டட்லி சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

வெளியேறிய டட்லி சிறிசேன
அத்துடன், எதிர்வரும் 3 மாத காலம் வரை அரசின் கட்டுப்பாட்டு விலைக்கு அமைவாக அரிசியை விற்பனை செய்யாத நெல் ஆலைகளை அரசாங்கத்தை பொறுப்பேற்குமாறும் கோரிக்கை விடுத்து விட்டு டட்லி சிறிசேன அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து அங்கு குழப்ப நிலை ஏற்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. என்ற போதும் நாடு அரிசி ஒரு கிலோகிராமினை 220 ரூபாய் என்ற குறைந்த விலையில் வழங்க அரிசி ஆலை உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த ஊடக சந்திப்பில் வைத்து டட்லி சிறிசேன கருத்து தெரிவிக்கையில், ஏனைய நாடுகளிடமிருந்து கடன் பெற்று இந்த பிரச்சினைகளை தீர்க்க முடியாது. இதை நான் சொன்னால் என்னை இந்திய விரோதி என சிலர் கூறுவார்கள்.

70 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசியை கொண்டு வந்து அதில் 40 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசியை களஞ்சியப்படுத்திவிட்டு மிகுதியை விற்பனை செய்துள்ளனர். இதற்கு நாடாளுமன்றில் இருக்கும் 225 பேரும் பொறுப்பு கூறு வேண்டும். இப்போதைக்கு அரிசி கையிருப்பில் இருக்கிறது.

அதனை குறைந்த விலையில் கொடுக்கலாம். அவ்வாறு அரிசி விலையை அதிகரிக்க வேண்டுமானால் அதை இன்னும் 3 மாதங்களின் பின்னர் தீர்மானிக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.