ரணில் தொடர்பில் குற்றச்சாட்டை முன் வைத்துள்ள அனுரகுமார திஸாநாயக்க

குறுகிய காலம் பதுங்கு குழியில் பதுங்கி இருந்த முன்னாள் பிரதமர் தற்போது வெளியில் வந்து, தனது வழமையான ஆட்டத்தை ஆரம்பித்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மக்களின் எதிர்ப்பில் இருந்து ராஜபக்ச குடும்பத்தை பாதுகாக்கும் ரணில்

மக்கள் மத்தியில் ஏற்பட்டிருந்த கோபம் மற்றும் எதிர்ப்பில் ராஜபக்ச குடும்பத்தையும் அரசாங்கத்தை பாதுகாக்கும் கவசம் போல் ரணில் விக்ரமசிங்க செயற்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

ராஜபக்ச குடும்பம் மற்றும் அவர்களின் அரசாங்கத்தை பாதுகாப்பதை தவிர ரணில் விக்ரமசிங்கவிடம் நாட்டு மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைக்கு தீர்வு இருக்கவில்லை என்பது தெளிவாகியுள்ளது.

இதனால், ரணில் விக்ரமசிங்க ராஜபக்ச நிர்வாகத்தின் கவசமாக மாறியுள்ளார். கடந்த காலத்தில் மக்கள் மத்தியில் ஏற்பட்ட எதிர்ப்பை புதிய சுற்றில் அதிகரிக்க செய்து, இந்த அழிவான ஆட்சியாளர்கள் விரட்டியடிக்க நேரிட்டுள்ளது.

இதற்காக அரசியல் அமைப்பு என்ற ரீதியில் எமது தலையீடு, பங்களிப்பு மற்றும் தலைமைத்துவத்தை வழங்க தயார். மாவட்டங்களை கேந்திரமாக கொண்டு மக்களை அணித்திரட்டி எதிர்ப்பு போராட்டங்களை ஆரம்பிக்க மக்கள் விடுதலை முன்னணி நடவடிக்கை எடுத்துள்ளது

அரசாங்கத்தை விரட்டியடிக்கும் வரை போராட்டம் தொடரும்

அரசாங்கத்தை விரட்டியடிக்கும் வரை மக்கள் வீதியில் இறங்க வேண்டும். ஏற்கனவே பல மாவட்டங்களில், நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமாகியுள்ளன.

எமது கட்சியின் தொழிற்சங்க அமைப்புகள் 23 ஆம் திகதி முதல் இந்த போராட்டங்களை அதிகரிக்கும். நாங்கள் காலடியை எடுத்து வைப்பது திரும்பி செல்வதற்காக அல்ல.

ரணில் விக்ரமசிங்க, கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் இதுவரை பின்பற்றி தவறான பொருளாதார கொள்கைகளை முடிவுக்கு கொண்டு வந்து, எமது எதிர்கால சந்ததிக்கு புதிய நாட்டை உருவாக்கும் ஆட்சியை ஏற்படுத்துவதற்காக போராட்டங்கள முன்னெடுக்க திட்டமிட்டுள்ளோம்.

மோசடியான,ஊழல் வலையமைப்பு எமது நாட்டுக்கு ஏற்படுத்தியுள்ள மோசமான அழிவில் எமது நாட்டின் குடிமக்கள் இரையாகக் கூடாது. வரிசைகளில் நிற்கும் குடிமக்கள் இறப்பது அவர்களின் தவறுகளால் அல்ல.

வரிசைகளில் இருக்கும் எவரும் இந்த தவறுகளுக்கு பங்களிப்பு செய்யவில்லை. வரிசைகளில் நின்று இறந்து போகும் நிலைமைக்கு எதிராக அணித்திரண்டு வீதியில் இறங்குங்கள் எனவும் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.