மன அழுத்தத்தில் இருந்து விடுபடவும், மனதை அமைதிப்படுத்தவும் உதவும் பயிற்சி முறைகள் ஏராளம் இருக்கின்றன. அவற்றை பின்பற்ற முடியாதவர்கள் ஒருசில எளிய பயிற்சிகளை மேற்கொண்டாலே போதுமானது. மன அழுத்தத்தை வியக்கத்தக்க வகையில் குறைக்கும் சில பயிற்சிகள் பற்றி பார்க்கலாம். 74 சதவீத இந்தியர்கள் மன அழுத்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
வயது வித்தியாசமின்றி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். தோட்டக்கலை: தினசரி ஏற்படும் மன அழுத்தத்தில் இருந்து விடுபட வைக்கும் ஆற்றல் தோட்டக்கலைக்கு உண்டு. தினமும் அரை மணி நேரம் தோட்டக்கலை சார்ந்த வேலைகளில் ஈடுபடுவதன் மூலம் சுமார் 200 கலோரிகளை எரிக்க முடியும்.
தோட்டக்கலை மன அழுத்தத்தை குறைக்கும் பண்புகளை கொண்டிருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மன அழுத்தத்தைக் குறைப்பது மட்டுமின்றி, சுற்றுச்சூழலை பசுமையாக்கி, சுத்தமான காற்றையும் வழங்கக்கூடியது. நடைப்பயிற்சி: உடற்பயிற்சியின் அடிப்படை வடிவங்களில் ஒன்றான நடைப்பயிற்சியும் கூட மன அழுத்தத்தை குறைக்கும் தன்மை கொண்டது.
இது மன அழுத்த ஹார்மோன்களின் உற்பத்தியைக் குறைத்துவிடும். அமெரிக்காவைச் சேர்ந்த தேசிய சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வின் படி, விறுவிறுப்பான நடைப்பயிற்சி மேற்கொள்வது இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம், கொழுப்பு மற்றும் டைப்-2 நீரிழிவு போன்ற நோய் பாதிப்புகளை குறைக்கும். மேலும் நடைப்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் ஆழமாக சுவாசிக்க முடியும். தாய் சீ: தாய் சீ என்பது சீன தற்காப்புக் கலைகளின் வடிவமாகும். இது உடல் இயக்கத்தை மன அழுத்தத்துடன் இணைக்கக்கூடியது.
அன்றாட கவலைகளில் இருந்து கவனத்தை திசை திருப்புவதற்கு இது உதவும். இந்த தற்காப்பு கலை பயிற்சி சிந்தனையை தூண்டிவிட்டு மனதை தெளிவாக்கும். தன்னம்பிக்கையை வளர்த்தெடுக்க உதவும். சர்க்யூட் பயிற்சி: ஒரே சமயத்தில் பல்வேறு விதமான உடற்பயிற்சிகளை சிறிது நேர இடைவெளியில் மேற்கொள்வது சர்க்யூட் பயிற்சி எனப்படும். இது பளு தூக்குதல் போன்ற கடினமான எடை தூக்கும் பயிற்சிகளுக்கு மாற்றாக கருதப்படுகிறது. கார்டியோ பயிற்சியாகவும் அமைந்திருக்கிறது.
ஒரே சமயத்தில் அதிக பயிற்சிகளை மேற்கொள்ளும்போது வியர்வை அதிகரிக்கும். அது உடலில் எண்டோமார்பின் அளவை ‘பம்ப்’ செய்து மன அழுத்தத்தை திறம்பட சமாளிக்கும். நடனம்: இசைக்கு ஈடு கொடுத்து நடனம் ஆடும்போது இதயத்துடிப்பு இயல்பாகவே அதிகரிக்கும். அப்படி இதயத்துடிப்பு அதிகரிப்பது மன அழுத்தத்தை குறைப்பதற்கு வழிவகை செய்யும். இதய துடிப்பு அதிகரிப்புக்கும், மன அழுத்தத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. நடனம் மன அழுத்தத்தை நீக்கி மகிழ்ச்சியான மன நிலையை உண்டாக்கும். டிமென்ஷியா அபாயத்தையும் குறைக்கும். யோகா : யோகா மூலம் மேற்கொள்ளப்படும் சில உடல் தோரணைகள் மன அழுத்தத்தை போக்க உதவும்.
முக்கியமாக இதய கோளாறுகள் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கும். அமைதியான மன நிலையை பெறவும் உதவும். உடல் மற்றும் மன வலிமையை சம நிலைப்படுத்தும். கடினமான யோகாசன பயிற்சிகளை மேற்கொள்ள முடியாதவர்கள் பிராணயாமா பயிற்சியை முயற்சிக்கலாம். சுவாசத்தில் கவனம் செலுத்த உதவும் இந்த பயிற்சியானது, மன அழுத்தத்தை எதிர்த்துப் போராடவும் உதவும். இதய செயல்பாடுகளை மேம்படுத்தவும் துணை புரியும். உத்தனாசனா எனப்படும் ஆசனம் உடலின் பின் பக்க தசைகளை இலகுவாக்கி மனதை அமைதிப்படுத்த உதவும். நேராக நிமிர்ந்து நின்று, பின்பு முன்னோக்கி குனிந்து தலையை மூட்டுகளில் உராய வைத்தபடி கைகளை கால் மீது தொட வைக்கும் இந்த ஆசனம் மனதிற்கு இதமளிக்கும்.