மட்டக்களப்பில் பாடசாலை ஆசிரியர்கள் வீதி மறிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய கல்வி வலயத்திற்குட்பட்ட ஓட்டமாவடி கோட்ட பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்களே தமக்கு பெட்ரோல் வழங்குமாறு இன்று(27) ஓட்டமாவடி மணிக்கூட்டு கோபுர சந்தியில் போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.
போராட்டம்
முதலில் ஓட்டமாவடி பிரதேச சபை முன்பாக இருபக்கமும் வீதியினை மறித்து போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதி வழியாக வருகை தந்து ஓட்டமாவடி மணிக்கூட்டு கோபுரம் வரை ஆர்ப்பாட்டக்காரர்கள் சென்றுள்ளனர்.
போராட்டக்காரர்கள் நான்கு பக்கமும் உள்ள வீதியினை மறித்தமர்ந்து சுமார் இரண்டரை மணி நேரம் மேற்கொண்டுள்ளனர்.
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையிலும், கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளை வழமை போன்று இயங்குமாறு மாகாணப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.
இந்தநிலையில் பாடசாலைக்கு செல்வதற்கு அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எரிபொருள் இன்மையால் பாடசாலைக்கு செல்ல முடியாத நிலைமை காணப்பட்டு வருகின்றது.
ஓட்டமாவடி கோட்டத்தில் 27 பாடசாலைகளில் ஏழு பாடசாலைகள் கஷ்டப் பிரதேசத்திலுள்ள பாடசாலைகள் ஆகும். இந்த பாடசாலைகள் தூர இடங்களில் உள்ள நிலையில் இங்கிருந்து செல்லும் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் போக்குவரத்து பிரச்சினை காரணமாக குறைவாக வருகை தருவதாக தெரிவித்துள்ளனர்.
இந்த நிலைமையினால் தங்களுக்கு உரிய எரிபொருளிளை வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது ”எழுத்தறிவித்தவன் நடுத்தெருவில்; அவமானம், வேண்டும் வேண்டும் எரிபொருள் வேண்டும். இல்லையேல் போராட்டம் தொடரும், கல்வியை சீரழிக்காதே எரிபொருள் வழங்கு, ஆசிரியர் சமூகத்தினை சீரழிக்காதே, பாடசாலை செல்ல அதிபர், ஆசிரியருக்கு பெட்ரோல் வழங்கு” என எழுதப்பட்ட பதாதைகளுடன் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
தங்களது பிரதேசத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஆசிரியர்களுக்கு எரிபொருள் வழங்கும் போது ஓட்டமாவடி கோட்ட பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் சென்ற சமயம் தகாத வார்த்தை பிரயோகங்களை பாவித்து அனுப்பியதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
போராட்ட இடத்திற்கு வருகை தந்த ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வீ.தவராஜா, கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எஸ்.எம்.முஸம்மில் ஆகியோரிடம் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெட்ரோல் பெற்று கொடுக்குமாறு கோரி மனு கையளித்துள்ளனர்.
தீர்வு
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வீ.தவராஜா, கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எஸ்.எம்.முஸம்மில் ஆகியோரால் தங்களது பிரதேசத்திலுள்ள நான்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பெட்ரோல் கொண்டுவரப்படும்.
அந்த நிலையில் முன்னுரிமை அடிப்படையில் தங்களுக்கு வாரத்திற்கு ஐந்து லீட்டர் வீதம் வழங்கப்படும் என்று வாக்குறுதி வழங்கிய நிலையில் போராட்டம் இடை நிறுத்தப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதி மறிப்பு போராட்டமானது சுமார் இரண்டரை மணி நேரம் வரை நடத்தப்படுள்ளது.
நடாத்தப்பட்ட போராட்டத்தினால் வீதி போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டதுடன், வாகனங்கள் ஆர்ப்பாட்டங்கள் முடிவடைந்த பின்னரே சென்றுள்ளன என்று தெரிவிக்கபட்டுள்ளது.