உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள், தாங்கள் செய்யும் சில தவறுகளை திருத்துவதற்கு முயற்சி செய்தாலே போதும். உடல் எடையை ஓரளவு கட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்: ஆண்களை பொறுத்தவரை உடல் எடையை குறைப்பது எளிதான காரியமாக இருக்காது.
அதிலும் எந்நேரமும் வேலை பற்றிய சிந்தனையில் இயந்திர கதியில் சுழன்று கொண்டிருப்பவர்கள் உடல் ஆரோக்கியத்தில் போதிய கவனம் செலுத்தமாட்டார்கள். அது இயல்பாகவே உடல் பருமன் பிரச்சினைக்கு வழிவகுத்துவிடும்.
1. உணவுத்திட்டம்: உடல் எடையை குறைப்பதற்கு பல உணவு முறைகள் புழக்கத்தில் உள்ளன. அவை உடல் எடையை குறைப்பதற்கு வழிவகுத்தாலும் மற்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை உடல் பெறுவதற்கு வழிவகை செய்யாது. மேலும் குறுகிய காலத்திற்குள் உடல் எடையை குறைய வைத்து விடும். ஆனால் அது தற்காலிகமானதுதான். ஆரோக்கியமான உடலுக்கு தேவையான, நிலையான எடை இழப்புக்கு வழி வகுக்காது. எனவே ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு வித்திடும் உணவுகள் மீது கவனம் செலுத்த வேண்டும். அதற்கு ஏற்ற உணவு திட்டத்தை உருவாக்க வேண்டும்.
2. பசியை கட்டுப்படுத்துங்கள் : நீண்ட நேரம் சாப்பிடாமல் பட்டினியாக இருந்தால் பசி அதிகம் எடுக்கும். அதனால் அளவுக்கு அதிகமாக சாப்பிட தோன்றும். அந்த சமயத்தில் குறைவாக சாப்பிடுவதும் முடியாது. அதற்கு இடம் கொடுக்காமல் நான்கு மணி நேரத்திற்கு ஒரு முறை சாப்பிட வேண்டும். ஒரு வேளை உணவு உட்கொண்டால், மறு வேளை ஆரோக்கியமான நொறுக்குத்தீனி வகைகளை உட்கொள்ளலாம். இது பசியை கட்டுப்படுத்த உதவும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக பராமரிக்கவும் உதவும். காலை உணவை 8 மணிக்குள்ளும், மதிய உணவை 1 மணிக்குள்ளும் சாப்பிடலாம். மாலை 3 மணிக்கு சிற்றுண்டியும், இரவு 7 மணிக்குள் இரவு உணவையும் உட்கொள்ளலாம்.
3. சரிவிகித உணவை உண்ணுங்கள் : உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், உண்ணும் உணவில் ஊட்டச்சத்துக்கள் சமச்சீரான அளவில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். எந்த உணவை உட்கொண்டாலும் அதில் 40 சதவீதம் புரதம், 35 சதவீதம் கார்போஹைட்ரேட், 25 சதவீதம் ஆரோக்கியமான கொழுப்புகள் இருக்க வேண்டும். இது உடல் எடை குறைப்புக்கு உதவும். பசியை கட்டுப்படுத்தும். வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க செய்யும்.
4. தண்ணீர் அதிகம் பருகுங்கள் : எல்லா உயிர்களுக்கும் நீர் தான் உயிர் ஆதாரமாக விளங்குகிறது. எனவே தண்ணீர் பருகுவது உடல் ஆரோக்கியத்தில் நேர்மறையான நன்மைகளை ஏற்படுத்தும். தண்ணீர் பருகும் அளவை அதிகரிப்பதன் மூலம் உடல் செயல்பாடுகளின் வேகத்தையும் அதிகப்படுத்த முடியும். மந்த உணர்வை போக்கவும் முடியும். சீரான இடைவெளியில் தொடர்ந்து தண்ணீர் பருகி வந்தால் நீரிழப்பு ஏற்படாது. உடலில் நீரின் அளவு குறைந்தால் தலைவலி, சோர்வு, சோம்பல், குழப்பம் மற்றும் மனநிலை மாற்றத்திற்கு வழிவகுக்கும். அதனை தடுக்க தண்ணீர் அதிகம் பருக வேண்டும்.
5. உடற்பயிற்சிக்கு 30 நிமிடங்கள் ஒதுக்குங்கள் : உட்கொள்ளும் உணவின் மூலம் பெறப்படும் அதிக கலோரிகளை எரிக்க உடற்பயிற்சி செய்வது மிகவும் முக்கியமானது. கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டால் மட்டுமே உடல் எடையை குறைக்க முடியும் என்பது தவறான கருத்து. உண்மை என்னவென்றால், தினசரி 30 நிமிடங்கள் எளிமையான உடற்பயிற்சியோ, உடல் உழைப்பு சார்ந்த வேலைகளையோ மேற்கொள்வது கூட எடை இழப்பு பயணத்தில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
உடல் செயல்பாடு அல்லது உடற்பயிற்சி என்பது ஒரு குறிப்பிட்ட பயிற்சியாக மட்டுமே இருக்க வேண்டிய அவசியமில்லை. தோட்டக்கலை மற்றும் வீட்டு வேலைகளில் ஈடுபடுவது, நாயுடன் நடப்பது, சைக்கிள் ஓட்டுவது, நண்பர்களுடன் நடைப்பயிற்சி, ஜாக்கிங் செய்வது என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இவையும் கூட உடல் எடை குறைப்பு செயல்பாட்டில் பெரிய மாற்றத்தை கொண்டு வரும்.