இலங்கை நாடாளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் வசித்து வரும் வீடுகளின் முகவரிகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், அந்த இணையத்தளத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விபரம் தொடர்பான பகுதியில் அலுவலக தொலைபேசி இலக்கம் மற்றும் நாடாளுமன்றக் கூட்டங்கள் நடைபெறும் தினங்களில் தொடர்புக்கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம் என்பன மாத்திரமே காணப்படுகின்றன.
இதற்கு முன்னர், விபரப்பக்கத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் முகவரிகள் உள்ளடக்கப்பட்டிருந்தன.
சேதமாக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள்
நாட்டின் நிலவும் சூழ்நிலையை காரணமாக கொண்டு இணையத்தளத்தில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் முகவரிகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த மே 9 ஆம் திகதி ஏற்பட்ட கலவரமான சம்பவங்களில் நாட்டின் பல்வேறு இடங்களில் பல நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் மற்றும் சொத்துக்கள் சேதமாக்கப்பட்டன.