இனி வரும் நாட்களில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டோக்கன் முறை நடைமுறைப்படுத்தப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
எரிசக்தி அமைச்சினால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட டோக்கன் முறை தற்போது நடைமுறைப்படுத்தப்படவில்லை என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் காணப்பட்ட நீண்ட வரிசைகளைக் குறைக்க ஆரம்பத்தில் டோக்கன் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
வியாபாரமாக மாறியுள்ள டோக்கன் முறை
பொதுமக்கள் வரிசையில் நிற்பதில் இருந்து விடுவிப்பதற்காகவும், ஜூலை 11 அல்லது 15 ஆம் திகதிகளில் எரிபொருள் கிடைத்தவுடன் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குச் செல்லுமாறு அவர்களுக்குத் தெரிவிக்கவும் டோக்கன் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
எனினும் குறித்த முறை பின்னர் நடைமுறைப்படுத்தப்படாமல் வியாபாரமாக மாறியுள்ளது.
தற்போது எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டோக்கன் வழங்கும் முறையானது எரிசக்தி அமைச்சின் தலையீடு இன்றி மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
டோக்கன் முறை தொடர்வதை அமைச்சர் நிராகரித்த போதிலும், பல எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் பெற வரிசையில் காத்திருக்கும் மக்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.