இலங்கையிலுள்ள வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்கு சலுகை வழங்கப்படுவது தொடர்பில் தகவலொன்று வெளியாகியுள்ளது.
இது தொடர்பான முக்கிய உத்தரவொன்று இலங்கை மத்திய வங்கியால் அனைத்து வங்கிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
வழங்கப்படவுள்ள சலுகைகள்
அதன்படி பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வங்கிக் கடன்களை செலுத்த முடியாதுள்ள வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
கொழும்பிலுள்ள மத்திய வங்கி தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
வங்கிகளுக்கு பணிப்புரை
இதேவேளை கடனை செலுத்த முடியாதவர்களுக்காக 6 மாதத்திற்கு இரு தடவைகளாக கடனை செலுத்துவதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு மத்திய வங்கியினால், வங்கிகளுக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
அதற்கிணங்க கடனை மீளச் செலுத்துவதற்கு ஆறு மாத கால சலுகை வழங்குவது, முறைப்படியான செயற்திட்டத்தின் மூலம் வங்கிக் கடனை அறவிடுவதற்கு வழங்கப்பட்டுள்ள காலத்தை நீடிப்பது மற்றும் செயற்படாத கடனை செலுத்தவுள்ளோரின் பட்டியலில் உள்ளோர் புதிய கடன்களை பெற்றுக் கொள்ளும்போது கடன் தகவல் பிரிவில் சலுகையுடனான மதிப்பீடுகளை மேற்கொள்வது தொடர்பிலும் மத்திய வங்கியினால் ஏனைய வங்கிகளுக்கு பணிப்புரைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.