சர்வகட்சி அரசாங்கம் அமைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருப்பதாக முன்னாள் அமைச்சரும்,நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
புதிய அரசாங்கத்தை அமைப்பதற்குத் தேவையான 113 பேரின் ஆதரவு சர்வகட்சி அரசாங்கத்திற்கு ஏற்கனவே உள்ளதாகவும், ஜனாதிபதி யாராக இருந்தாலும் இந்த அரசாங்கம் அமைக்கப்படுவது உறுதி என்றும் தெரிவித்துள்ளார்.
சர்வகட்சி அரசாங்கத்தின் பிரதமர் தொடர்பான தகவல்
மேலும், ஏனைய அனைத்து அதிகாரங்களும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்திற்கு விடப்படும் எனவும், இவ்வாறு அமையும் சர்வகட்சி அரசாங்கத்தின் கட்சித் தலைவர்கள் அமைச்சுப் பதவிகளைப் பெறமாட்டார்கள் எனவும், கொள்கைகளை வகுத்து அமைச்சர்கள் அந்தக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் தலைமைக் குழுவில் இருப்பார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த புதிய அரசாங்கத்தின் பிரதமரை நியமிக்கும் முறை தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாகவும், ஒரு வாரத்தின் பின்னர் புதிய அரசாங்கம் அமைக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.
இதேவேளை, அரசாங்கத்திற்கெதிராக போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்றையதினம் பதவி விலகக்கூடும் எனவும் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.