மட்டக்களப்பு- வவுணதீவு பகுதியில் யானையின் தாக்குதலில் காயமடைந்த விவசாயி ஒருவர் எரிபொருள் இல்லாத காரணத்தினால் உரிய நேரத்திற்கு வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லமுடியாத நிலையில் உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
மட்டக்களப்பு- வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள கண்டியனாறு கிராமத்தில் நேற்று காட்டு யானை தாக்கியதில் வயல் காவலில் இருந்த விவசாயி ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இருநூறுவில் –உன்னிச்சை பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயதுடைய தி .கருணாகரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
எரிபொருள் சிக்கல்
தனது வீட்டிலிருந்து நேற்று மாலை கண்டியனாறு பிரதேசத்தில் உள்ள தனது வயலினை பராமரித்து காவலில் இருந்த போது திடீரென வயலினுள் நுளைந்த காட்டு யானை குறித்த நபரினை தாக்கியதில் படுகாயமடைந்த நிலையில் அயலில் உள்ள வயல் காவலில் இருந்த விவசாயிகளால் மீட்டெடுத்து மோட்டார் சைக்கிளில் வைத்தியசாலைக்கு கொண்டுசென்றபோது பாவற்கொடிச்சேனை பகுதியில் எரிபொருள் இல்லாத காரணத்தினால் அவரை கொண்டுசெல்லமுடியாத நிலையேற்பட்டுள்ளது.
இந்த நிலையில் உழவு இயந்திரம் ஒன்றில் அவர் ஏற்றப்பட்டு மீண்டும் வவுணதீவு தாண்டியடி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
கால தாமதம்
சுமார் 8.15மணியளவில் குறித்த சம்பவம் நடைபெற்றபோதிலும் அவரை 11.00மணிக்கு பின்னரே வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல முடிந்ததாகவும் எரிபொருள் பிரச்சினையால் குறித்த நபரை காப்பாற்ற முடியவில்லையெனவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கு மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது