ஆனி மாதத்திலேயே வருகின்ற ஆனி வளர்பிறை பிரதோஷ தினமும் சிவ வழிபாட்டிற்கு மிகவும் ஒரு சிறந்த நாளாக இருக்கிறது. அத்தகைய ஆனி மாத வளர்பிறை பிரதோஷ தினத்தில் நாம் சிவபெருமானை விரதம் இருந்து வழிபட்டால் என்னென்ன பலன்களை பெறலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
விசேஷங்கள் நிறைந்த ஆனி மாதத்தில் வருகிற அனைத்து தினங்களும் தெய்வ வழிபாட்டிற்கும், விரதம் மேற்கொள்ளவும் ஏற்றதாக இருக்கிறது. மற்ற மாதங்களில் வரும் பிரதோஷ தினங்களை காட்டிலும் சுப காரியங்கள் விரும்பி செய்யப்படுகின்ற மாதமான ஆனி மாதத்தில் வருகின்ற இந்த ஆனி வளர்பிறை பிரதோஷ தினத்தில் சிவபெருமானே முறைப்படி வணங்கி வழிபடுபவர்கள் வாழ்வில் விரும்பிய அனைத்தும் கிடைக்கப்பெற்று இறுதியில் சிவனில் கலக்கின்ற பாக்கியமும் பெறுகிறார்கள்.
ஆனி மாத வளர்பிறை பிரதோஷ தினத்தன்று அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்துவிட்டு சிவனை வணங்கி, உணவேதும் உண்ணாமல் விரதம் இருப்பது சிறப்பு. பால், பழம் சாப்பிட்டும் அன்றைய தினத்தில் சிவபெருமானுக்கு விரதமிருக்கலாம். பிரதோஷ வேளையான மாலை 4 மணி முதல் 6 மணி வரையான நேரத்தில் அருகிலுள்ள சிவன் கோயிலுக்கு சென்று சோமாசூக்த பிரதிட்சணம் வந்து வணங்க வேண்டும். பிறகு நந்தி தேவர் மற்றும் சிவப்பெருமானின் அபிஷேகத்திற்கு பால், பன்னீர், தேன், தயிர் போன்ற அபிஷேக பொருட்களை தானம் தந்து, பிரதோஷ வேளை பூஜையின் நந்தி தேவர் மற்றும் சிவபெருமான், பார்வதி தேவியை வணங்க வேண்டும்.
ஜாதகத்தில் சூரிய திசை நடப்பவர்கள் ஞாயிற்றுக்கிழமை வருகின்ற பிரதோஷ தினத்தில் சிவன் கோயிலுக்கு சென்று வழிபடுவதால் சூரிய பகவானால் நற்பலன்கள் அதிகம் உண்டாகும். கோயிலில் இறைவனை வழிபட்ட பின்பு, உங்களால் முடிந்தால் பக்தர்கள் மற்றும் கோயிலுக்கு வெளியில் இருக்கும் யாசகர்களுக்கு கீரை சாதம், பழச்சாறு போன்றவற்றை தானம் வழங்கலாம்.
இம்முறையில் ஆனி வளர்பிறை பிரதோஷத்தில் சிவபெருமானை வணங்குபவர்களுக்கு நீண்ட நாட்களாக பீடித்திருக்கும் வியாதிகள் அனைத்தும் நீங்கும். உயரிய சிந்தனைகள், எண்ணங்கள் மனதில் நிறையும். கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழும் கணவனும் – மனைவியும் சேர்ந்து வாழும் சூழல் உருவாகும். குழந்தைகளுக்கு கல்வி கற்பதில் ஏற்பட்டிருந்த மந்த நிலை நீங்கி, சிறப்பாக பயில்வார்கள். கர்ம வினைகளும், பூர்வ ஜென்ம பாவ வினைகளும் நீங்கும். திடீர் ஆபத்துகள் ஏற்படாமல் காக்கும். மரண பயம் அறவே நீங்கும்.