வைத்திய நிருவாக மேற்படிப்புக்காக வெளிநாடு சென்றுள்ள வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தி இம்மாத முடிவில் யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக மீண்டும் கடமையேற்கவுள்ளார்.
தற்போது பதில் பணிப்பாளராகக் கடமையாற்றும் வைத்திய கலாநிதி க. நந்தகுமாரன் மீண்டும் பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராகக் கடமையைத் தொடர உள்ளார்.
லண்டன் சென்றுள்ள வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தி 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராகக் கடமையாற்றி வருவதுடன் சுகாதார அமைச்சினால் மருத்துவமனைக்கான நிரந்தரப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஒருவருட கால வெளிநாட்டு மேற்படிப்புக் காலப்பகுதியில் நாட்டில் கோவிட் தொற்றுத் தீவிரமாகியிருந்தது. இந்நிலையில் அவர் நாடு திரும்பி யாழ். போதனா வைத்தியசாலையில் கடமையைப் பொறுப்பேற்று அனைத்துத் தரப்பினரதும் ஒத்துழைப்புடன் இடர்கால முகாமைத்துவத்தை சிறந்த முறையில் முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.
முன்னுதாரணமான அரச நிருவாக அதிகாரி
வைத்திய கலாநிதி. சத்தியமூர்த்தி கடந்த 6 ஆண்டுகளில் யாழ். போதனா மருத்துவமனையில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டு, மாற்றங்களை ஏற்படுத்தி வைத்தியசாலை ஊழியர்கள் மத்தியிலும் பொது மக்களிடையேயும் நன்மதிப்பைப் பெறிருந்தார்.
இவரது தன்னலமற்ற அர்ப்பணிப்பான சேவையைக் கௌரவித்து ட்ரான்ஸ்பரன்சி இன்ரநஷனல் அமைப்பு 2019 ஆம் ஆண்டு ஊழலுக்கெதிராகச் செயற்பட்ட நேர்மையான அரச ஊழியர்கள் 5 பேரில் ஒருவாராக வைத்திய கலாநிதி. சத்தியமூர்த்தியைத் தெரிவு செய்து நேர்மைத்திறன் விருது (Integrity Icon 2019) வழங்கி, முன்னுதாரணமான அரச நிருவாக அதிகாரிகளில் ஒருவராகக் கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.
மனித நேய விருது
வன்னிப்பகுதியில் 2009 காலப்பகுதியில் மனிதப்பேரவலம் நிகழ்ந்த போது காண்பித்த உதாரணப்படுத்தத் தக்கதும், மிகவும் தனித்துவமானதுமான தலைமைத்துவத்தை வழங்கி, நோயுற்றவர்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் மருத்துவமளித்து ஆற்றிய மனிதாபிமானப் பணிக்காக அமெரிக்காவின் இன்ரர் அக்சன் போரம் 2011 ஆம் ஆண்டு வைத்திய கலாநிதி. சத்தியமூர்த்திக்கு ”மனிதநேய விருது ” வழங்கிச் சிறப்பித்தது.