யாழ்.கோப்பாய் பொலிஸ் பிரிவில் மூன்று வீடுகளில் திருட்டு மற்றும் கொள்ளையில் ஈடுபட்ட முதன்மை சந்தேகநபர் மற்றும் நகைகடை உரிமையாளர், உடந்தையாக இருந்தவர்கள் என 10 பேர் யாழ்பபாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மே, ஜூன் மாதங்களில் கோண்டாவில் மஞ்சத்தடியில் இரண்டு வீடுகளை உடைத்து தங்க நகைகள், பெறுமதிவாய்ந்த அலைபேசிகள், சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் துவிச்சக்கர வண்டியைத் திருடியமை தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
அத்துடன், மற்றொரு வீட்டில் பெண் அணிந்திருந்த தங்க நகை அறுக்கப்பட்டிருந்தது. அதுதொடர்பிலும் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யபட்டிருந்தது.
குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணை
சம்பவங்கள் தொடர்பில் யாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் தலைமை பொலிஸ் பரிசோதகர் நிகால் பிரான்சிஸ் தலைமையிலான மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இந்த சம்பவங்கள் தொடர்பில் சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த முதன்மை சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் உடந்தையாக இருந்தவர்கள், அடகு வைத்துக் கொடுத்தவர்கள் என கிளிநொச்சி, சுன்னாகததைச் சேர்ந்தவர்கள் மற்றும் யாழ்பபாணம் நகைக்கடை உரிமையாளர் என மேலும் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
அத்துடன் திருட்டப்பட்ட பொருள்கள், கொள்ளையிடப்பட்ட பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. முதன்மை சந்தேகநபர் போதைப்பொருளுக்கு அடிமையாகி தொடர்ச்சியாக கொள்ளை மற்றும் திருட்டில் ஈடுபட்டு வந்ததுடன் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்தவர் என்று பொலிஸார் கூறியுள்ளனர்.