இயர் போன் பாவனையால் ஏற்ப்படும் பிரச்சினைகள்

பாட்டுப் பிரியர்களுக்கு ‘இயர் போன்’ மகிழ்ச்சியான சாதனமாக தோன்றலாம். ஆனால் அது காதுகளுக்கு மிக ஆபத்தானது. ‘இயர் போன்கள்’ காதுக்குள்ளே புகுந்து இசையால் காதுகளை அடைத்துவிடுகிறது. இவை அதிக பயன்பாட்டிற்கு வந்தபிறகு, காது கோளாறுகளுடன் ஆஸ்பத்திரிகளுக்கு வருவோர் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்திருக்கிறது.

அதற்கு காரணம் இரைச்சல் நேரடியாக செவிப்பறைகளை தாக்குவது தான். பொதுவாக ஒலி இரண்டு வகைப்படும். பரவலாக வந்து காதில் விழும் ஒலி ஒருவகை. மற்றொன்று ஒரே நேர்கோட்டில் பயணித்து காதுகளை அடையும் ஒலி. இரண்டாவது ஒலி அலைகள் காதுகளை சேதப்படுத்தும். ‘இயர் போன்’ இசை அந்த இரண்டாவது ஒலி வகையைச் சேர்ந்தது.

அந்தச் சத்தத்தை கேட்க மனம் விரும்பலாம். ஆனால் காதுகள் ஏற்றுக்கொள்ளாது. நம்முடைய காதுகள் ஓரளவுதான் அதிர்வுகளை தாங்கும். இரைச்சல் 40 டெசிபல் அளவை தாண்டும்போது காதுகள் மெல்ல செவிட்டுத்தன்மையை அடைகிறது. தினமும் இயர் போன் மூலம் பாட்டு கேட்பவர்களுக்கு சிறிது காலத்தில் மற்றவர்கள் சத்தமாக பேசினால்தான் காதுகள் கேட்கும். சிறிய சத்தங்கள் கேட்காமலே போய்விடக்கூடும். இவைதான் காது கேளாமையின் அறிகுறிகள்.

இயர் போன்களால் காது கேளாமல் போவது மட்டும் பிரச்சினையல்ல. அதைத் தொடர்ந்து பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதுதான் வாழ்வின் சோகம். பேசும் சக்தியும், சிந்திக்கும் திறனும் குறையும். நினைவாற்றல் மங்கும். அடிக்கடி தலைவலி, தூக்கமின்மை போன்ற குறைபாடுகள் ஏற்படும். மயக்கம், உடல் நடுக்கம், மன அழுத்தம் இவை அத்தனையும் தொடர்ந்து வரும். தகவல் தொடர்பு மையங்களான கால் சென்டர்களில் வேலை செய்பவர்கள் இயர் போன்களை காதில் மாட்டிக் கொண்டு இரவு பகலாக மற்றவர்கள் பேசுவதை கேட்டு பணி செய்தே ஆக வேண்டும்.

அவர்கள் தங்கள் காது விஷயத்தில் இன்னும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பணி நேஇரத்தில் சத்தத்தை குறைத்து வைத்துக் கொள்ளலாம். இன்று இயர் போனை உடலின் அங்கம்போல பயன்படுத்துபவர்கள் அநேகம். நாகரிகமாய் உடை அணிந்து கிளம்புபவர்கள்கூட உடையின் உள்ளே இயர்போனை இணைத்து அதை காதில் திணித்து பயணத்தை பாட்டுக் கேட்டபடி தொடர்கிறார்கள்.

அவர்கள் வண்டியில் இருந்து இறங்கிய பின்பும் இயர்போன் இசையை நிறுத்தாமல் அப்படியே சாலையை கடப்பது அவர்களை விபத்தில் சிக்க வைக்கிறது. வாழ்நாள் முழுவதும் நமக்கு கேள்வித்திறன் தேவை. அதை பாதியிலேயே தொலைத்து விட்டால் மீதி காலத்தை எப்படி கழிப்பது? இயர் போன் கேட்கும் பழக்கம் உடையவர்கள் காது கேட்பதில் லேசாக ஏதாவது மாற்றம் தெரிந்தால் உடனடியாக காது சம்பந்தப்பட்ட மருத்துவரை அணுகி காது கேட்கும் சக்தியை பரிசோதனை செய்யுங்கள்.