நாடு முழுவதும் குவிக்கப்படும் இராணுவத்தினர்!

நாடு முழுவதும் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தலை பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று வெளியிட்டார்.

ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் ஜனாதிபதி செயலாளர் காமினி செனரத் இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அவசர நிலை கருத்திற்கொண்டு, மக்களின் பாதுகாப்பையும், நாட்டின் பாதுகாப்பையும், உறுதி செய்வதற்கும், மக்களின் வாழ்க்கைக்கான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை பேணுவதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இன்றைய தினம் கொழும்பு நகரிலும் நாடாளுமன்றத்தை சுற்றியுள்ள பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர், பொலிஸ், பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் புலனாய்வுப் பிரிவின் விசேட குழுக்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட முற்பட்டால் அவர்களை தடுத்து நிறுத்தவும் கலைந்து செல்லவும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கலகத்தடுப்பு பிரிவுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கொழும்பு மற்றும் நாடாளுமன்றத்தை சுற்றியுள்ள பகுதிகளுக்கு நீர்த்தாரை, கண்ணீர் புகைக் குழுக்களும் வரவழைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக விசேட வேலைத்திட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.