இலங்கை நாடாளுமன்றத்தில் நாளை நடைபெறவுள்ள புதிய ஜனாதிபதித் தேர்தல் சர்வதேச ரீதியில் சூடுபிடித்துள்ள நிலையில், போட்டிக் களத்திலிருந்து எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ திடீரென விலகியுள்ளார்.
அதோடு தமது கட்சி டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவு வழங்கும் என்றும் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார். இந்நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் டலஸ் பெற்றி பெற்றால், சஜித் பிரதமர் என்ற இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், ஜனாதிபதித் தேர்தலில் தோல்விப் பயம் காரணமாகப் பிரதமர் பதவிக்கு ஆசைப்பட்டே சஜித் இந்த முடிவை எடுத்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான வேட்புமனுத் தாக்கல் நடவடிக்கை இன்று காலை நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் முற்பகல் 10 மணிக்கு நாடாளுமன்றம் கூடியபோது மூன்று பேரின் பெயர்கள் ஜனாதிபதிப் பதவிக்கான வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவால் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி உறுப்பினரான டலஸ் அழகப்பெருமவின் பெயர் முன்மொழிய ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளரான ஜி.எல். பீரிஸ் அதனை வழிமொழிந்தார்.
பதில் ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்கவின் பெயரை சபை முதல்வர் தினேஷ் குணவர்தன முன்மொழிய மனுஷ நாணயக்கார அதனை வழிமொழிந்தார்.
இதேவேளை, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவின் பெயரை அக்கட்சியின் பிரசாரச் செயலாளர் விஜித ஹேரத் முன்மொழிய அக் கட்சியின் உறுப்பினர் ஹரினி அமரசூரிய அதனை வழிமொழிந்தார்.
இதனையடுத்து நாளை இவர்களில் ஒருவரை ஜனாதிபதியாகத் தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில் இலங்கை ஜனாதிபதி பதவியில் யார் அமரபோக்கின்றார் என்கின்ற எதிர்பார்ப்பு இலங்கையிம் மட்டுமால்லாது சர்வதேசத்தின் ஆர்வத்தையும் தூண்டியுள்ளது.