நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாளைய தினம் அவர் இவ்வாறு தனது பதவி விலகலை அறிவிக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
பதவியில் இருந்து விலகிய தம்மிக்க
முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகியதை அடுத்து வெற்றிடமாகிய நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தம்மிக்க பெரேரா கடந்த ஜூன் மாதம் 22 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நுழைந்தார்.
பின்னர், ஜூன் 24ஆம் திகதி முதலீட்டு மேம்பாட்டு அமைச்சராகப் பதவியேற்ற அவர், ஜூலை 10ஆம் திகதி அமைச்சு பதவியில் இருந்து விலகினார்.
ரணிலை பதவி விலகுமாறு கோரிக்கை
இலங்கையின் அடுத்த ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்றிருந்த நிலையில் அதில் ரணில் விக்ரமசிங்க வெற்றியீட்டி இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.
அத்துடன், எட்டாவது நிறைவேற்று ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற தேர்தலில் தம்மிக்க பெரேராவும் வாக்களித்திருந்தார்.
இதற்கு முன்னர் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகித்திருந்த சமயம் அவரை பதவியில் இருந்து விலக்க வேண்டும் என தம்மிக்க பெரேரா தெரிவித்திருந்தார்.
அத்துடன் தம்மிக்க பெரேரா வகித்த அமைச்சு பதவியில் இருந்து விலகியவுடன், அந்த அமைச்சுப் பொறுப்புக்களை ரணில் விக்ரமசிங்க தனக்கு கீழ் கொண்டுவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.