ரணிலுக்கு எதிராக போராட்டங்கள் தொடரும் சுமந்திரன்

ரணில் விக்ரமசிங்கவுக்கும், ஊழல் முறைமைக்கு எதிராகவும் எமது அமைதியான போராட்டங்கள் தொடரும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பதிவிலே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

“இன்று நாடாளுமன்றம் மக்களின் விருப்பத்திற்கு மாறாக ஒரு முடிவை எடுத்துள்ளது. ராஜபக்சே ஆட்சியால் ரணில் விக்ரமசிங்கே கொண்டு வரப்பட்டுள்ளார்.

எனவே, ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஊழல் முறைமைக்கும் எதிராக எமது அமைதியான போராட்டங்கள் தொடரும் என குறிப்பிட்டுள்ளார்.

காலி முகத்திடல் போராட்டம்
மேலும், ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டும் என காலி முகத்திடல் போராட்டக்காரர்களும் தங்களது போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பின் போது இலங்கையின் 8வது நிறைவேற்று ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்.

பொது மக்களின் விருப்பத்திற்கு மாறாக ஜனாதிபதி நியமனம் செய்யப்பட்டுள்ளதால் அவர் பதவி விலக வலியுறுத்தி அமைதியான முறையில் போராட்டம் தொடரும் எனவும் காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.