இலங்கையின் புதிய ஜனாதிபதியாக நாடாளுமன்றில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பு மூலம் தெரிவான ரணில் விக்ரமசிங்க நேற்றைய தினம் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் பதவிப் பிரமாணம் செய்திருந்தார்.
இந்த நிலையில் இன்று காலை பிரதமராக தினேஷ் குணவர்தன பதவிப்பிரமாணம் செய்திருந்த நிலையில், பகல் 1 மணியளவில் 18 அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.
முக்கிய அமைச்சுக்களாக குறிப்பிடும் போது கல்வி, சுகாதாரம், நீதி, வெளிவிவகாரம், பொதுமக்கள் பாதுகாப்பு போன்ற அமைச்சுப் பதவிகளுக்கு இன்றைய தினம் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
எனினும் நிதி அமைச்சு இன்றைய தினம் எவருக்கும் வழங்கப்படாத நிலையில் பாதுகாப்பு மற்றும் நிதி ஆகிய இரு முக்கிய அமைச்சுக்களும் ஜனாதிபதியின் கைகளிலேயே காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை இன்று பதவியேற்றுக் கொண்ட அமைச்சர்களுக்கு மேலதிகமாக இன்னும் சில அமைச்சர்கள் வரும் நாட்களில் பதவியேற்கும் சாத்தியம் காணப்படுவதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைக்கு நிதி மற்றும் பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றை ஜனாதிபதி தொடர்ந்தும் தன் வசம் வைத்துக் கொண்டுள்ளார். அத்துடன் முன்னாள் துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் அமைச்சுப் பதவிக்கும் யாரும் நியமிக்கப்படவில்லை.
இந்த நிலையிலேயே அடுத்து வரும் நாட்களில் மேலும் சில அமைச்சுப் பதவிகளுக்கான நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நியமனத்தின் பின்னர் இடைக்கால அமைச்சரவை சிறிது மாற்றியமைக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
அதன் பின்னர் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் சர்வகட்சி அரசாங்கத்துக்கான அமைச்சரவை ஒன்றை நியமிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.