உடலில் உள்ள உள் உறுப்புகளுள் மூளையின் செயல்பாடு முக்கியமானது. மூளை ஆரோக்கியமான இருந்தால்தான் சிந்தனை திறன் மேம்படும். சுறுசுறுப்பாக செயல்படவும் முடியும். இரவு நேர பார்ட்டிகளில் கலந்து கொண்டு தாமதமாக தூங்குவது, கடும் வேலைப்பளு, துரித உணவுகளை சாப்பிடுவது போன்ற பழக்கங்கள் மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
புகை பிடிக்கும் பழக்கமும் மூளைக்கு பங்கம் விளைவிக்கும். புகைப்பழக்கத்திற்கு அடிமையாகும்போது கொழுப்பின் அளவு அதிகரிக்கும். ரத்தத்தில் கெட்ட கொழுப்பு கலந்து மூளையின் செயல்பாட்டுக்கு அச்சுறுத்தலாக மாறும். மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தில் பாதிப்பு நேரும்போது ரத்தம் உறைந்து பக்கவாத பாதிப்பு உருவாகிவிடும்.
அதிகமாக சர்க்கரையை பயன்படுத்துவதும் மூளைக்கு தீங்கு விளைவிக்கும். ரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக இல்லாவிட்டால் ரத்த ஓட்டத்தில் பாதிப்பு நேர்ந்து மூளையையும் பாதிக்கும். மன அழுத்தம் ஏற்படுவதற்கும் வழிவகுத்துவிடும். அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதும் மூளையின் செயல்பாடுகளுக்கு இடையூறை ஏற்படுத்தும். தமனியின் இயக்கத்தில் பாதிப்பு ஏற்பட்டு இறுதியில் மூளைக்கு ஆபத்து நேரும்.
அதிகமாக சாப்பிடுவதால் உடல்பருமன் போன்ற மேலும் பல உடல்நல பாதிப்புகளும் உண்டாகும். நீண்ட நேரம் தொடர்ச்சியாக வேலை பார்ப்பதும் மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். அதன் மூலம் அறிவாற்றல் குறையும் என்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. சிலர் கெட்டியான போர்வையால் தலையை மூடிக்கொண்டு தூங்குவார்கள். அப்படி தூங்கும்போது சுவாசத்தில் கலக்கும் ஆக்சிஜனுக்கு இடையூறு ஏற்பட்டு மூளையின் இயக்கம் குறையும்.அது பல்வேறு விதமான உடல்நல பிரச்சினைகளுக்கு காரணமாகும்.