திரைப்பிரபலங்களின் அந்தரங்க விடயங்கள் குறித்து அவதூறாக பேசி வரும் நடிகரும், விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் விரைவில் கைதாகலாம் என கூறப்படுகிறது.
1980களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக வலம் வந்தவர் பயில்வான் ரங்கநாதன், பத்திரிக்கையாளரும் கூட.
கடந்த சில ஆண்டுகளாக சினிமா விமர்சகராக மாறிய பயில்வான் ரங்கநாதன், யூடியூப்களில் வரம்பு மீறி பேசுவது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
நடிகர், நடிகையரின் தனிப்பட்ட அந்தரங்க விஷயங்களை பேசத் தொடங்கியதும் பலத்த எதிர்ப்புகள் எழுந்தன.
நடிகை ராதிகா, பின்னணி பாடகி சுசித்ரா, தயாரிப்பாளர் கே.ராஜன் உள்ளிட்டோர் இவரை வெளிப்படையாக எச்சரித்துள்ளனர்.
இதில் சுசித்ராவும், கே.ராஜனும் போலீஸ் கமிஷனரகத்தில் புகார் அளித்து உள்ளனர்.
இந்நிலையில் சமீபத்தில் வெளியான இரவின் நிழல் படம் குறித்து விமர்சிக்க, அதில் நடித்த ரேகா நாயர் திருவான்மியூர் கடற்கரையில் சென்று கொண்டிருந்த பயில்வான் ரங்கநாதனிடம் கடுமையாக சண்டையிட்டார்.
இதனை தொடர்ந்து ‘ரங்கநாதனை கைது செய்து, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, சமூக ஆர்வலர்களும், திரைத்துறையினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவர்கள் கூறியுள்ளதாவது, ‘யு டியூப்’ மற்றும் ‘டிவி’ நிகழ்ச்சிகளில் பேச, அவருக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும். போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.
ரங்கநாதனின் நடவடிக்கையால், பொது மக்கள் மத்தியில் திரைத் துறையினருக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது.
எவ்வித ஆதாரமுமின்றி, நடிகையரின் தனிப்பட்ட விஷயங்களை வாய்க்கு வந்தபடி பேசுகிறார்.
அவர் மீது, நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கு தொடர்வது குறித்து ஆலோசிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.