இதயப் பாதுகாப்பிற்குப் புகைபிடித்தலைத் தவிர்க்கச் சொல்வது மருத்துவர்களின் வழக்கம். ஆனால் பச்சிளம் குழந்தைகூட இதய நோயுடன் பிறப்பது உண்டு. இதயத்தைப் பாதுகாக்கும் முறைகளில் குழந்தை நலம் மிக முக்கியமானது. பிறப்பதற்கு முன்பே சிசுவின் இதயத்தைக் காத்தல் அவசியம். பொதுவாகத் திருமணம் ஆன உடன் கருக்கொள்வது இயல்பிலேயே நிகழக்கூடியது.
அந்த நாட்களில் பெண்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டும். பெண் கருக்கொண்டதை அறிவதற்கு முன்பே கருவில் உள்ள குழந்தையின் இதயம் முழுமையாக உருவாகிவிடும். பொதுவாகப் பெண்கள் முகக் கிரீம்கள் பயன்படுத்துவதில் அதிக ஆர்வம் கொண்டுள்ளனர். பருவ வயதில் ஏற்படும் பருக்களையும், இப்பருக்களால் உண்டாகும் ஆக்னே எனப்படும் பிளாக் ஹெட்ஸ் போன்றவற்றை நீக்கவும் இளம்பெண்கள் கிரீம்களைப் பயன்படுத்துகிறார்கள். இவற்றை நீக்க ரெடினாய்க் அமிலம் கலந்த, முகக் கிரீம்கள் பயன்படுத்துவது வழக்கம். இக்கிரீம்கள் அபாயத்தை வரவழைக்கின்றன.
இவை கருவில் சிசுவின் இதயத்தைப் பாதிக்கின்றன. திருமணத்திற்கு முன்னர் இவற்றைப் பயன்படுத்துவதால் ஆபத்து ஒன்றுமில்லை. கருத்தரிக்கும் காலத்தில் கவனமாக இருக்க வேண்டியது மிக அவசியம். இந்த அபாயத்தை விலை கொடுத்து வாங்காமல் இருக்க, இக்கிரீம்களில் ரெடினாய்க் அமிலம் கலக்காமல் இருக்கிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். கருத்தரிக்கும் காலத்திலாவது இந்த வகை கிரீம்களைத் தவிர்த்தல் சிசுவின் ஆரோக்கியத்திற்கு நன்மை தரும்.
இக்காலத்தில் ஆண்கள்கூட முகப்பருக்களை நீக்க இவ்வகை கிரீம்களைப் பயன்படுத்துவது உண்டு. ஆண்கள் பயன்படுத்துவதால் கரு சிசுவுக்குப் பாதிப்பு ஒன்றும் இல்லை. இந்த அமிலம் விந்துகளைத் தாக்குவது இல்லை. இந்த அமிலம் தோலின் மேற்புறத்தின் வழியாகப் பயணிப்பதால் கருவை மட்டுமே பாதிக்கும், விந்துவைப் பாதிப்பதில்லை. குழந்தைகளின் இதயம் பாதிக்கப்படுவதற்குப் பல காரணங்கள் உண்டு.
தாய்க்குப் பிறவியிலேயே இதய பாதிப்பு இருந்தால் குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படும். தாய்க்குக் கர்ப்பக் காலத்தில் நீரிழிவு நோய் இருந்தால், அது கருவிலேயே சிசுவைப் பாதிக்கும். முன்னர்ச் சொன்னது போல் கரு உருவாகும் காலத்தில் முதல் இரு மாதங்களில் ரெடினாய்க் அமிலம் கலந்த கிரீம்களைப் பயன்படுத்தி இருந்தால், இதயப் பாதிப்பு அதிகமாகும். தந்தைக்குப் பிறவி இதய நோய் இருந்தால் குழந்தைக்கும் இதயம் பாதிக்கப்படலாம். கருவில் குழந்தை உருவாகும் முறை குறித்து அறிந்தால் இப்பாதிப்பு ஏற்படும் நிலையை அறிந்துகொள்ளலாம்.
ஒரு தாய் தாய்மையை உணர்வதற்கு முன்னர்க் கர்ப்பப்பையில் கரு ஓர் இடத்தைப் பிடித்துவிடும். சிசுவின் உடல் பாகங்களில் முதலில் உருவாவது இதயமே. இந்த இதயம் எட்டு வாரத்திற்குள் முழுமையாக உருவாகிவிடும். இரண்டு குழாயாக மட்டும் உருவாகும் இதயமானது இணைந்து மடங்கி, இதயத்தின் வடிவைப் பெற்றுவிடும். இந்த எட்டு வாரங்களில் கரு உருவானது கண்டுபிடிக்கப்படாமல் இருக்கலாம். பொதுவாக இந்த நேரத்தில் தாய்க்குக் காய்ச்சல் வந்தால், மருந்து, மாத்திரை உட்கொள்ளும் நிலை ஏற்படும். இது சாதாரணமான காய்ச்சல்தானே என்று அலட்சியமாக இருந்துவிட முடியாது.
இக்காய்ச்சல் டார்ச்- TORCH என்ற வைரஸ், கூட்டமாகத் தாயைத் தாக்குவதால் ஏற்படலாம். இதனால் தாய்க்கு ஏற்படும் அபாயம் மட்டுமில்லாமல், கருவிலுள்ள சிசுவையும் அது தாக்கிவிடும். இதனால் குழந்தைக்குக் காது கேளாமல் போய்விடலாம். மேலும் கண்ணில் காடராக்ட் வளர்ச்சி ஏற்படும். இந்தப் பாதிப்பை ‘ருபெல்லா சிண்ட்ரோம்’ என்று மருத்துவ உலகம் கூறுகிறது. இவ்வகை சளி, காய்ச்சலுக்குத் தரப்படும் மருந்துகள் மிக வீரியமுள்ளவையாக இருப்பதால், இவற்றால் பக்கவிளைவுகள் ஏற்படும்.
இந்தப் பக்கவிளைவுகள் கருவிலுள்ள சிசுவின் இதயத்தைத் தாக்கக்கூடும். கரு தோன்றக்கூடிய முதல் எட்டு வாரங்கள் பெண்கள்தான் கவனமாக இருக்க வேண்டும். தனக்குத் தொற்றுநோய் ஏற்படாமல் காத்துக் கொள்ள வேண்டும். அப்போது மருந்து மாத்திரை உட்கொள்ள வேண்டிய அவசியம் இல்லாததால், கருவிலுள்ள சிசுவுக்கு இதய ஓட்டை ஏற்பட்டுவிடாமல் காக்கலாம். அதனால் இளம் பெண்களே முகப்பரு கிரீம்களிடம் உஷாராக இருங்கள்.