22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நாளை முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரை நடக்கிறது. இதில் நீச்சல், தடகளம், பேட்மிண்டன், கூடைப்பந்து, கைப்பந்து, குத்துச்சண்டை, ஆக்கி, மல்யுத்தம், ஸ்குவாஷ் உள்பட 20 விளையாட்டுகளில் மொத்தம் 280 பந்தயங்கள் அரங்கேறுகிறது. இந்த போட்டியில் 72 நாடுகளை சேர்ந்த 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா சார்பில் 15 விளையாட்டுகளில் 200-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் களம் காணுகிறார்கள். இதில் இன்று நடைபெறும் பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ள ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் வலுவான ஆஸ்திரேலியாவை (மாலை 3.30 மணி) எதிர்கொள்கிறது.
இந்த நிலையில் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:- இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கும், காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கும் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்