காலையில் எழுந்ததும் தண்ணீர் பருகுவது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும். ஆரோக்கியமும், சருமத்திற்கு பளபளப்பும் சேர்க்கும் பானங்களை தயார் செய்து பருகுவதன் மூலம் இரட்டிப்பு நன்மைகளை அடையலாம்.
கீரை ஜூஸ்:
கீரையை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது உங்கள் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவும். சருமத்திற்கு ஈரப்பதத்தை அளிப்பதோடு, கரும்புள்ளிகளை கட்டுப்படுத்தும். முதுமையின் ஆரம்பகால அறிகுறிகளை தடுத்து இளமை தோற்றத்தை தக்கவைக்கவும் உதவும்.
தேவையானவை:
நறுக்கிய கீரை – 2 கப்
ஆப்பிள் – 1 (நறுக்கவும்)
எலுமிச்சை – அரை பழம்
தண்ணீர் – முக்கால் கப்
மிளகு தூள் – சிறிதளவு
செய்முறை:
கீரையை நன்றாக கழுவி, அதனுடன் ஆப்பிள் சேர்த்து மிக்சியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும். அதனுடன் எலுமிச்சை சாறை பிழிந்து கொள்ளவும். தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக கலந்து கொள்ளவும்.
பின்பு நன்றாக வடிகட்டி அதனுடன் மிளகு தூள் சேர்த்து பருகலாம். இந்த ஜூஸை அதிகாலையில் பருகி வர, சருமம் பொலிவுடன் காட்சியளிக்கும்.
வெள்ளரி ஜூஸ்: வெள்ளரிக்காயில் நிறைய நீர் உள்ளடங்கி இருப்பதோடு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த காபிக் அமிலம், அஸ்கார்பிக் அமிலம் போன்றவை நிறைந்துள்ளன. வெள்ளரிக்காய் உட்கொள்வது சருமத்தை நீரேற்றமாக வைத்துக்கொள்ள உதவும். எண்ணெய் மற்றும் வறண்ட சருமத்திற்கு வெள்ளரி சிறந்த நிவாரணம் தரும். உடலில் உள்ள நச்சுக்களையும் வெளியேற்ற துணைபுரியும்.
தேவையானவை:
வெள்ளரி – 1
எலுமிச்சை பழம் – 2
தண்ணீர் – 4 டம்ளர்
புதினா இலைகள் – ஒரு கைப்பிடி
செய்முறை:
வெள்ளரிக்காயை தோல் நீக்கி சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். அதேபோல் எலுமிச்சை பழத்தையும் நறுக்கிக் கொள்ளவும். கண்ணாடி ஜாரில் தண்ணீர் ஊற்றி அதில் வெள்ளரிக்காய், எலுமிச்சை பழ துண்டுகளை போடவும். புதினா இலைகளையும் தூவிக்கொள்ளவும். சிறிது நேரம் ஊறவைத்துவிட்டு அந்த நீரை பருகலாம். நாள் முழுவதும் இந்த நீரை பருகி வருவதன் மூலம் சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைத்துக்கொள்ளலாம். சரும அழகையும் மெருகேற்றி விடலாம்.
கேரட்-பீட்ரூட் ஜூஸ்:
இந்த இரண்டு வேர் காய்கறிகளிலும் வைட்டமின் சி, ஏ, துத்தநாகம், போலிக் அமிலம், இரும்பு, நார்ச்சத்து, மாங்கனீஸ் போன்ற பல்வேறு வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. இந்த சத்துக்கள் ரத்தத்தை சுத்திகரிப்பதோடு குடலை சுத்தமாக வைத்திருக்கவும் உதவுகின்றன. அத்துடன் இந்த சிவப்பு பானம், ஆரோக்கியமான மற்றும் ஒளிரும் சருமத்தை பெறவும் உதவி புரியும். கரும்புள்ளிகளை குறைக்கும். சுருக்கங்களை தடுக்கும். முகப்பருக்களை கட்டுப்படுத்தும். வறண்ட சருமத்திற்கு நிவாரணமும் தரும்.
தேவையானவை:
பீட்ரூட் – பாதி
கேரட் -4
இஞ்சி – சிறு துண்டு
தண்ணீர் – அரை கப்
எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்
செய்முறை:
கேரட் மற்றும் பீட்ரூட்டை துண்டுகளாக நறுக்கி மிக்சியில் அரைத்துக்கொள்ளவும். அதனுடன் இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறு, தண்ணீர் கலந்து ஜூஸ் பதத்துக்கு தயார் செய்து கொள்ளவும். பின்பு வடிகட்டி பருகலாம். காலையில் வெறும் வயிற்றில் பருகுவது நல்லது. விரும்பினால் சிறிதளவு மிளகு தூள் சேர்த்துக்கொள்ளலாம். ஆப்பிள் ஜூஸ் ஆப்பிள்களில் உள்ள நார்ச்சத்து குடல் இயக்கத்தை கட்டுப்படுத்த உதவும்.
மேலும் செரிமான அமைப்பை சரியான முறையில் பராமரிக்க வழிவகை செய்யும். குடல் சுத்தமாக இருந்தாலே சருமம் பிரகாசமாக மின்னும். சருமத்தில் படிந்துள்ள அதிகப்படியான எண்ணெய் மற்றும் நோய்க்கிருமிகளை நீக்க ஆப்பிள் உதவும். இந்த பழத்தில் உள்ள ஆன்டிஆக்சிடென்டுகள் சரும செல்களை புத்துயிர் பெறச்செய்து, சருமத்திற்கு கூடுதல் பொலிவு அளிக்க உதவும். சரும செல்களை புத்துயிர் பெற செய்யவும், ஒளிரும் சருமத்தை பெறவும் சுவையான ஆப்பிள் ஜூஸை எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்.
தேவையானவை:
ஆப்பிள் – 4
எலுமிச்சை – அரை பழம்
இஞ்சி – சிறு துண்டு
தண்ணீர் – 1 கப்
உப்பு – சிறிதளவு
செய்முறை: ஆப்பிள்களை தோலுரித்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். அதனுடன் எலுமிச்சை சாறு, இஞ்சி சேர்த்து மிக்சியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும். அதனுடன் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் கலந்து கிளறிவிடவும். இந்த சாற்றை டம்ளரில் ஊற்றி அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து காலை வேளையில் பருகி வருவதன் மூலம் சரும பிரச்சினைகள் வராமல் தடுக்கலாம்.