நாட்டில் கடந்த சில மாதங்களாக டெங்கு நோய் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில், சிறுவர்களுக்கு இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடிக்குமாயின் உடனடியாக வைத்தியரை நாடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டெங்கு நோய் தாக்கம் பெரியவர்களை விடவும் சிறியவர்களுக்கே அதிகமாக ஏற்படுவதாகவும் கொழும்பு சீமாட்டி ரிஜ்வே வைத்தியசாலையில் சிறுவர்நல வைத்திய நிபுணர் பிரதீப் நவபாலசூரியன் தெரிவித்துள்ளார்.
விசேட நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பெற்றோர்களிடம் விடுக்கப்பட்டுள்ள விசேட கோரிக்கை
தற்போது சிறுவர்களுக்கு இடையில் காய்ச்சல் வேகமாக பரவி வருவதாகவும்,பிள்ளைகளைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுமாறு சுகாதார தரப்பினர் பெற்றோர்களிடம் விசேட கோரிக்கையினை விடுத்துள்ளனர்.
எனவே,பிள்ளைகளுக்குக் காய்ச்சல், இருமல், தடுமல், சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக அருகிலுள்ள அரச வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும்,கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக 5 மாகாணங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எனவே, நுளம்பு ஒழிப்பு அறிவுறுத்தல்களை பின்பற்றாத அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அச்சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.