கடமைகளை பொறுப்பேற்க முன்னரே பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு நிகழ்ந்த சோதனை!

அரசியல் அழுத்தங்கள் காரணமாக கடமைகளை பொறுப்பேற்றுக் கொள்ள முன்னதாகவே பொலிஸ் அதிகாரியொருவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பூகொட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்ட அஜித் சேனாநாயக்க, கடமைகளை பொறுப்பேற்க முன்னதாகவே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு பிரபல அரசியல்வாதிகளின் அழுத்தம் காரணமாக இவ்வாறு இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இடமாற்றம்
தங்களது அரசியல் நடவடிக்கைகளுக்கு உதவிகளை செய்யாத காரணத்தினால் குறித்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடமைகளை பொறுப்பேற்றுக் கொள்ள சுப நேரம் பார்த்திருந்த போது, பொலிஸ் உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் மீது அழுத்தங்களை பிரயோகித்து குறித்த பொலிஸ் அதிகாரிக்கு இடமாற்ற உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் அந்தந்த பொலிஸ் பிரிவிற்கு அரசியல்வாதிகளின் பரிந்துரைகளின் அடிப்படையில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் நியமிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கோரிக்கைக்கு அமைய நியமிக்கப்பட்ட பொலிஸ் பிரிவிற்கு பொறுப்பான அதிகாரிகள்
அண்மையில் அரசியல்வாதிகளின் வீடுகள் தீக்கிரையான போது அந்தந்த பொலிஸ் பிரிவிற்கு பொறுப்பான அதிகாரிகள் அரசியல்வாதிகளின் கோரிக்கைக்கு அமைய நியமிக்கப்பட்டதாக பொலிஸ் மா அதிபர் கூறியிருந்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்றுக் கொண்டதன் பின்னர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் நேர்முகத் தேர்வு மூலம் நியமிக்கப்பட்டனர்.

எனினும், பொலிஸ் தலைமையகத்தினால் நியமிக்கப்பட்ட அதிகாரி ஒருவர் அரசியல் அழுத்தங்கள் காரணமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சிங்கள பத்திகையொன்று செய்தி வெளிளியிட்டுள்ளது.